தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்தார் தக்‌சின்

2 mins read
26d7760b-bb7a-41af-a4a2-82f911522be3
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌சின் ஷினவாத். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌சின் ஷினவாத் மருத்துவப் பரிசோதனைக்காகச் சிங்கப்பூர் வந்தார் என்று தாய்லாந்து ஊடகங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) தகவல் வெளியிட்டுள்ளன.

திரு தக்‌சின் தமது மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பிறகு திங்கட்கிழமை (செப்டம்பர் 8) மாலை பேங்காக் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திரு தக்‌சின் மீதான உச்ச நீதிமன்ற விசாரணை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) நடக்கவுள்ளதால் அவர் பேங்காக் சென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5), திரு தக்‌சின் மருத்துவ காரணங்களுக்காகத் தாய்லாந்தைவிட்டு வெளியேறினார்.

பேங்காக் குடிநுழைவு சோதனைச் சாவடியில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் தக்‌‌சினின் விமானம் சிங்கப்பூர் சிலேத்தார் விமான நிலையம் மூடுவதற்கு முன்னர் தரையிறங்கவில்லை.

இதனால் அவர் துபாய் சென்றார். அங்கு அவர் அவருடைய நண்பர்களையும் மருத்துவர்களையும் சந்தித்தார். அதன் பின்னர் சிங்கப்பூருக்கு தக்‌சின் வந்தார்.

வழக்கு விசாரணை இருப்பதால் செப்டம்பர் 8ஆம் தேதி மாலைக்குள் பேங்காக் திரும்பத் திட்டமிட்டதாகத் தக்‌சின் தமது பயண விவரங்களை எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டார்.

திரு தக்‌சின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தாய்லாந்து மன்னர் அந்தத் தண்டனையை ஓராண்டாகக் குறைந்தார்.

இருப்பினும் தக்‌சின் மருத்துவக் காரணங்களால் சிறைக்குச் செல்லவில்லை. அவர் அதிநவீன வசதிகொண்ட மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்டார்.

தக்‌சின் ஆறுமாத காலம் மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பரோலில் வெளிவந்தார்.

அதேபோல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தக்‌சின் அரச குடும்பத்தைத் தவறாகப் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் வெளிநாடு செல்வதற்கான அவர்மீதான தடையும் நீக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டது சிறைத் தண்டனையாகுமா என்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கில் தோற்றால் தக்‌ஷின் சிறையில் அடைக்கப்படலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் தக்‌சினின் மகள் பெடோங்டார்ன் ஷினவாத் தாய்லாந்துப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெடோங்டார்ன், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாகத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரைப் பதவியிலிருந்து நீக்கியது.

குறிப்புச் சொற்கள்