தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் மீண்டும் ஜனநாயகக் கட்சித் தலைவரானார்

2 mins read
6fa98782-285e-417d-858d-7bd42efbebea
திரு அபிசிட், 2008ஆம் ஆண்டுமுதல் 2011வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார். உலகளாவிய நிதி நெருக்கடியின்போது அவர் நாட்டை வழிநடத்தினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

https://www.straitstimes.com/asia/se-asia/thailand-ex-pm-abhisit-reinstated-as-conservative-party-leader

BANGKOK - தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் அபிசிட் வெஜ்ஜஜிவா மீண்டும் அந்நாட்டின் ஆகப் பழைமையான கட்சியின் தலைவராகியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், வாக்களிப்பின் மூலம் அவரை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

திரு அபிசிட், 2008ஆம் ஆண்டுமுதல் 2011வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார். உலகளாவிய நிதி நெருக்கடியின்போது அவர் நாட்டை வழிநடத்தினார். பேச்சுத் திறமையால் மக்களிடையே அவருக்குச் செல்வாக்கு இருந்தது. செஞ்சட்டை எதிர்ப்பாளர்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அவர் பதவியில் இருந்தார்.

அவர் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தபோது ராணுவத்தினர் செஞ்சட்டை எதிர்ப்பாளர்களை ஒடுக்கக் கடும் நடவடிக்கைகளை எடுத்தனர். அவற்றில் 90க்கும் அதிகமானோர் மாண்டனர். 2,000க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

ரத்தக்கறை படிந்த கைகளைக் கொண்ட பிரதமர் என்று எதிர்க்கட்சியினர் திரு அபிசிட்டைச் சாடினர். அடுத்த சில ஆண்டுகளில் அவரின் அரசியல் வாழ்க்கை தடுமாறியது. கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன. அதனால் தலைமைப் பொறுப்பைத் துறந்த அவர், 2023ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலகினார்.

ஜனநாயகக் கட்சியினரிடையே சனிக்கிழமை (அக்டோபர் 18) நடந்த வாக்களிப்பில், 96 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திரு அபிசிட். வாக்களிப்பு உள்ளூர் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

“என் ஆற்றலில் மீண்டும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி,” என்று 61 வயது அபிசிட், கட்சி உறுப்பினர்களிடம் கூறினார். கட்சியின் நீல நிற உடையை அவர் அணிந்திருந்தார்.

“இங்கிருந்து என் இதயம் என்றுமே சென்றதில்லை,” என்றார் அவர்.

தாய்லாந்தில் தற்போது சிறுபான்மை அரசாங்கம் ஆட்சி செய்கிறது. பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நான்கு மாதத்திற்குள் நடத்த உறுதிதெரிவித்துள்ளார்.

திரு அபிசிட் மீண்டும் திரும்பியதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி அடுத்த தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் பிறந்தவரான திரு அபிசிட் ஆக்ஸ்ஃபோர்டில் பயின்றவர். இங்கிலாந்து, தாய்லாந்து இரண்டிலும் அவர் குடியுரிமை பெற்றுள்ளார். தாய்லாந்து நிலவரத்தைப் பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது என்று எதிர்த்தரப்பினர் குறைகூறுவது வழக்கம். ஆண்களுக்கான கட்டாய ராணுவச் சேவையைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் திரு அபிசிட் மீது வைக்கப்படுவதுண்டு.

குறிப்புச் சொற்கள்