10,000 ரிங்கிட் மதிப்புள்ள கம்பிவடங்களைக் கொள்ளையடித்த சந்தேகத்தில் நால்வர் மீது விசாரணை

10,000 ரிங்கிட் மதிப்புள்ள கம்பிவடங்களைக் கொள்ளையடித்த சந்தேகத்தில் நால்வர் மீது விசாரணை

படம்: தெமெர்லோ காவல்துறை

23 Oct 2026 - 7:10 pm

2 mins read

தெமெர்லோ: அக்டோபர் 9ஆம் தேதி, கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்திற்குச் (இசிஆர்எல்) சொந்தமான கம்பிவடங்களை ஆயுதமேந்திய கும்பலாகச் சேர்ந்து கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர், வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 23) தெமெர்லோ அமர்வு நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.

எஸ். ரவீந்திரன் (22), ஏ. சூர்யா பிரகாஷ் (21), எம். டெனிஷ் (22), எல். ரூமேஸ் (34) ஆகிய நால்வரும், நீதிபதி அகமது ரிஸ்கி அப்துல் ஜலில் முன்னிலையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.

குற்றச்சாட்டின்படி, இவர்கள் துருப்பிடித்த வாள் ஒன்றைக் கொண்டு, இசிஆர்எல் திட்டத்திற்குச் சொந்தமான கம்பிவடங்கள், கட்டுமான ஆதரவு உபகரணங்களைக் கும்பலாகச் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும், அப்பொருள்கள் கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் மதிப்புடையவை என்றும் காவல்துறை கூறியது.

இந்தச் சம்பவம், அக்டோபர் 9ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு, தெமெர்லோவில் உள்ள ஸ்ரீ துவாலாங் பகுதியில் அமைந்திருந்த இசிஆர்எல் திட்டக் கிடங்கில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395, 397-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கும்பலாகச் சேர்ந்து கொள்ளையடித்தல், அபாயகரமான ஆயுதத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்தல் ஆகிய குற்றங்களுக்கு, அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை, பிரம்படி ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதிபதி அகமது ரிஸ்கி, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் தலா 15,000 ரிங்கிட் பிணைத் தொகையையும், ஒரு பிணையாளரையும் நிர்ணயித்தார். மேலும், இந்த வழக்குக்கான விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தெமெர்லோவில், இசிஆர்எல் திட்டம், டெலிகாம் மலேசியா தொடர்பான கொள்ளைகள், கம்பிவடத் திருட்டுகளில் தொடர்புடைய நான்கு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இந்த மாதம் கைது செய்யப்பட்ட 17 பேரில் இவர்களும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்
நீதிபதிபிரம்படிசிறைத்தண்டனை