11ஆவது மாடியிலிருந்து விழுந்த நான்கு வயதுச் சிறுவன் உயிர்தப்பினான்

11ஆவது மாடியிலிருந்து விழுந்த நான்கு வயதுச் சிறுவன் உயிர்தப்பினான்

2 mins read
5040ea56-5a5d-465a-8a5c-e50f65003ce2
18 நாள் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஸியாவ்மிங் தற்போது பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுவிட்டான். - படம்: சோஹு
multi-img1 of 2

பெய்ஜிங்: பதினோராவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நான்கு வயதுச் சிறுவன் உயிர்தப்பிய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

தன் தாயாரின் பிரிவால் வாடியதாகவும் அவர் வருகிறாரா என்று பார்ப்பதற்காகச் சன்னலில் ஏறியபோது தவறி விழுந்ததாகவும் நினைவு திரும்பியபின் அச்சிறுவன் கூறினான்.

லியாவ்நிங் மாநிலத்திலுள்ள டாலியன் எனும் துறைமுக நகரில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து ‘ஹைபாவ் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ நாளன்று ஸியாவ்மிங் என அழைக்கப்படும் அச்சிறுவனின் பெற்றோர் அவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, விநியோகப் பணிகளுக்காக வெளியில் சென்றனர். சற்று நேரத்ததில் வீடு திரும்பிவிடுவதாக ஸியாவ்மிங்கின் தாயார் அவனிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

“கதவும் சன்னல் கதவும் மூடியிருந்தன. வீட்டில் அவனது நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காக ஒரு படக்கருவியையும் வைத்துள்ளோம்,” என்றார் அவனுடைய தாயார்.

ஆனால், அவன் எப்படியோ சன்னல் கதவின் சாவியைக் கண்டெடுத்து, அவனாகவே திறந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

இரண்டு மணி நேரத்திற்குப்பின் வீடு திரும்பிய ஸியாவ்மிங்கின் தந்தை சோங், அவன் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனையடுத்து, கீழே சென்று தேடிய அவர், தங்கள் குடியிருப்புக் கட்டடத்திற்கு அருகே இருந்தே சிமென்ட் தரையில் அவன் விழுந்து கிடந்ததைக் கண்டார்.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குத் தம் மகனைக் கொண்டுசென்றார் சோங். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறினார்.

ஸியாவ்மிங்கிற்குப் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவனது கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவையும் சேதமடைந்திருந்தன.

“எங்கள் மகன் பிழைப்பதற்கு ஐந்து விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு, வானமே விழுந்ததுபோல மனமுடைந்துபோனோம்,” என்றார் சோங்.

அவர்களின் நற்பேறாக, உடல்நலம் தேறிய ஸியாவ்மிங் 18 நாள்களுக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டான். இன்னும் அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸியாவ்மிங் விரைவில் முழுமையாகத் தேறிவிடுவான் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் அவனது பெற்றோர், “எங்கள் பிள்ளை பிழைத்தது அதிசயந்தான்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாஏப்ரல்உடல்நலம்