சுதந்திர தேவி சிலைக்கு ஒளியூட்டுகிறது பிரான்ஸ்

அமெரிக்காவின் 250வது பிறந்தநாள்

சுதந்திர தேவி சிலைக்கு ஒளியூட்டுகிறது பிரான்ஸ்

1 mins read
422195f9-d354-41f4-ae34-ed00ac4e8095
நியூயார்க்கின் லிபர்ட்டி ஐலண்டில் உள்ள சுதந்திர தேவி சிலை. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்காவின் 250வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் சுதந்திர தேவி சிலை இருக்கும் இடத்தில் பெரிய அளவிலான ஒளிக்காட்சிக்கு பிரான்ஸ் ஏற்பாடு செய்யவிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சுத் தூதரகம் திங்கட்கிழமை (ஜூன் 29) அதனைத் தெரிவித்தது.

“பிரமாண்டமான கலைப் படைப்பு,” என்று வருணிக்கப்படும் ஒளிக்காட்சி முன்கூட்டியே பதிவுசெய்யப்படும். அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு அன்றைய தினம் ஏபிசி நிறுவனம் 25 மணிநேர நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் ஒளிக்காட்சிப் படைப்பு இடம்பெறும்.

“பொதுமக்கள் இதற்கு முன்னர் பார்த்திராத அளவுக்குப் புதிய பரிமாணத்தில் சுதந்திர தேவி சிலை காட்சிதரும். அதன் அடையாளத்தையும் உணர்வுபூர்வ ஆற்றலையும் மெருகூட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருக்கும்,” என்று தூதரகம் தெரிவித்தது.

“எங்களின் நட்பு 250 ஆண்டுகள் பழைமையானது. இன்னும் அது வலுவாகவும் ஆழமாகவும் உள்ளது. அதனால்தான் அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய விரும்பினோம்,” என்று நியூயார்க் நகரத்திற்கான பிரான்சின் தலைமைத் தூதர் செட்ரிக் ஃப்வீரீசோ, ஏஎஃப்பி ஊடகத்திடம் கூறினார்.

நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலையை 1886ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குக் கொடுத்தது பிரான்ஸ். அமெரிக்காவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் அதுவும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்அமெரிக்காவிடுதலைசிலைஒளியூட்டு