இலவச சத்துணவுத் திட்ட ஊழல்: மேலும் பலர் இந்தோனீசியாவில் கைது

இலவச சத்துணவுத் திட்ட ஊழல்: மேலும் பலர் இந்தோனீசியாவில் கைது

உணவு விநியோகத்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கியதிலும் ஊழல்
படம்: த ஸ்டார்

15 Jun 2026 - 6:34 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கம், சத்துணவுத் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்த விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

ஏற்கெனவே அந்த விசாரணையில் அரசாங்கத்தின் மூன்று முன்னாள் அதிகாரிகள் தலைமைச் சட்ட அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுவிட்டனர். தற்போது மேலும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அத்திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் தேசிய சத்துணவு முகமை (பிஜிஎன்) அறிவித்ததாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ ஊடகம் திங்கட்கிழமை (ஜூன் 15) செய்தி வெளியிட்டது.

தலைமைச் சட்டஅலுவலகம், பிடி யாசா அர்தா திரிமாநுங்கால் என்ற தளவாட நிறுவனத்தின் ஆணையர் அன்ட்ரி முல்யோனோவை வெள்ளிக்கிழமை (ஜூன் 12)கைது செய்தது.

திட்டத்தின்கீழ் உணவுகளை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் 21,000 மோட்டார்சைக்கிள்களின் மொத்த மதிப்பை $74.6 மில்லியன் வரை விலையேற்றியதாக அன்ட்ரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

பல டிரில்லியன் ரூப்பியா மதிப்புள்ள அரசாங்கத்தின் புதிய சத்துணவுத் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து பலர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள் வாங்கியதில் ஊழல்

சட்டத்துக்கு எதிராக மோட்டார்சைக்கிள் விற்பனை விலைமதிப்பில் செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாக தனக்கென அன்ட்ரி பணத்தை ஒதுக்கிக்கொண்டதாக துணைத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் விசாரணை இயக்குநர் சியாரிஃப் சுலைமான் நாஹ்டி கூறினார்.

மோட்டார்சைக்கிள்கள் வாங்கப்படுவதற்கு முன்பாக உணவு விநியோகம் மிகவும் தாமதம் அடைந்ததாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

அதன்விளைவால் புதிய மோட்டார்சைக்கிள்கள் 2026ஆம் ஆண்டில் வாங்கப்படமாட்டாது என்று நிதி அமைச்சர் புர்பாயா யூடி சதேவா தெரிவித்தார். துறையில் நடந்த உட்பிரச்சினைகளால் சில மோட்டார்சைக்கிள்கள் வாங்குவதற்கென ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

தலைமைச் சட்ட அலுவலக அதிகாரிகள் அசெஃப் யூசோப் சொமாந்த்ரி என்ற வர்த்தகரை கடந்த வாரம் கைது செய்தனர். இம்மாதத் தொடக்கத்தில் கைதான பிஜிஎன் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான சோனி சொஞ்ஜயாவுடன் அவர் தொடர்பில் இருந்தவர் ஆவார்.

குறிப்புச் சொற்கள்