உறவுகளை வலுப்படுத்த பிரெஞ்சு அதிபர் மலேசியா வருகை

உறவுகளை வலுப்படுத்த பிரெஞ்சு அதிபர் மலேசியா வருகை

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 2:05 pm

1 mins read

கோலாலம்பூர்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) கோலாலம்பூரில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.

தற்காப்பு, வர்த்தகம், எரிசக்தி மாற்றம், முக்கியக் கனிமங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் பேசவுள்ளனர்.

இருநாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மெக்ரோன், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இரு நாடுகளின் உறவு 70 ஆண்டு காலத்தை நிறைவுசெய்ய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை உத்திசார்ந்த பங்காளித்துவமாக மேம்படுத்துவதில் இப்பேச்சு கவனம் செலுத்தும் என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. மேலும், பல புரிந்துணர்வுக் குறிப்புகளும் கையெழுத்தாகவுள்ளன.

மின்னியல் வாகனங்கள், மின்னணுச் சாதனங்களுக்கான காந்தங்கள் தயாரிப்பில் அத்தியாவசியமான அரியவகைத் தாதுக்களின் விநியோகத்தைப் பன்முகப்படுத்துவது தமது பயணத்தின் முக்கிய நோக்கம் என மெக்ரோன் கூறினார். பல விநியோக வழிகள் இருப்பது, பாகங்கள் தட்டுப்பாட்டால் உற்பத்திப் பணிகள் தடைபடும் அபாயத்தைக் குறைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இணையத் தாக்குதல்கள், தவறான தகவல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தற்காப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு நாடுகளும் தயாராக உள்ளன. மேம்பட்ட பகுதிமின்கடத்திப் பொதியிடலிலிருந்து சில்லு வடிவமைப்புக்கு மாறும் முயற்சிக்கும் எரிசக்தி மாற்றத் திட்டங்களுக்கும் உதவ பிரான்ஸ் முன்வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்