தொடர் மின்தடை; நிலையான மின்சாரம் வழங்க ஜகார்த்தா மக்கள் கோரிக்கை

தொடர் மின்தடை; நிலையான மின்சாரம் வழங்க ஜகார்த்தா மக்கள் கோரிக்கை

2 mins read
8754b9bf-cbd2-4c4f-8f9a-21a5abead719
இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவின் இலகு ரயில் சேவைகள் ஏப்ரல் 23ஆம் தேதி ஏற்பட்ட மின்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவின் பல பகுதிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுப் போக்குவரத்துச் சேவைகள், பல்கலைக்கழகச் சேர்க்கைத் தேர்வுகள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

நீண்ட நேரம் நீடித்த மின்வெட்டால் கடும் அவதிக்குள்ளான ஜகார்த்தா மக்கள் நம்பகமான மின்சக்திச் சேவையை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதத்தில் ஏற்பட்ட மின்தடைகளில், நீண்ட நேரம் நீடித்த இரண்டாவது பெரிய மின்வெட்டு இதுவாகும்.

இந்தோனீசிய அரசுக்குச் சொந்தமான மின்சக்தி நிறுவனமான பிஎல்என் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஜகார்த்தா முழுவதும் உள்ள 13 முக்கிய துணை மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

அன்றைய தினம் காலை 10:25 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 11:25) இந்த மின்தடை தொடங்கியதாகவும் அது கூறியது.

மேலும், இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அது குறிப்பிட்டது.

பெண்டுங்கன் ஹிலிர், ஜகார்த்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள தம்ரின் வர்த்தக வட்டாரம், குனிங்கன், ஜககர்சா, தெபெட் ஆகிய இடங்கள் மின் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஜகார்த்தாவில் உள்ள டிரான்ஸ்ஜகார்த்தா பேருந்து நிலையத்தின் பேருந்துச் சீட்டுக் கட்டண முறை தற்காலிகமாகச் செயலிழந்தது.

இலகு ரயில் சேவைகளும் மின்சாரம் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

“இதுபோன்ற மின்தடை மீண்டும் ஏற்படாது என நான் நம்புகிறேன். ஜகார்த்தா போன்ற பெரிய நகரத்தில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என பெண்டுங்கன் ஹிலிரைச் சேர்ந்த காப்பிக் கடை ஊழியரான ஆண்ட்ரே கூறினார்.

குறிப்புச் சொற்கள்