உக்ரேன் மீது ரஷ்யா புதுத் தாக்குதல்: தடைகள் வரும் என டிரம்ப் எச்சரிக்கை

2 mins read
5907dce6-15c9-4ff5-b039-383db0cf9442
வடகிழக்கு உக்ரேனின் கார்கிவ் நகரில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர். - படம்: இபிஏ

வாஷிங்டன்: பேச்சுவார்த்தை மூலம் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக டிரம்ப் ஏற்கெனவே உக்ரேனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைகள், டிரோன்கள் வழி புதுத் தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கோபமடைய வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள், வரிவிதிப்பு போன்றை மேற்கொள்ளப்படும் என்று அவர் தற்பொழுது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) தனது டுருத் என்ற சமூக ஊடகத் தளத்தில், “ரஷ்யா உக்ரேன் மீது பெருமளவில் குண்டுவீசித் தாக்குவதைப் பார்க்கும்போது போர்நிறுத்தம் ஏற்பட்டு உடன்பாடு ஏற்படும்வரை, ரஷ்யா மீது பரந்த அளவிலான வங்கிப் பரிவர்த்தனைத் தடைகள், வரிகள் என விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறேன்,” பதிவேற்றியுள்ளார்.

மேலும்,“காலம் கடந்துபோகும் முன் ரஷ்யாவும் உக்ரேனும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும்,” என்று அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

இதே எச்சரிகையை அதிபரின் தேசிய பொருளியல் மன்றத்தின் தலைவர் திரு கெவின் ஹாசெட் என்பவரும் வெள்ளிக்கிழமை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்துரைத்த திரு ஹாசெயட், “அதிபர் அனைத்துத் தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைப்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அதை செயல்படுத்த அவர் சலுகைகளுடன் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளார்,” என்றார்.

இந்நிலையில், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அடுத்த வாரம் சவூதி அரேபியா செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உக்ரேன் ஆக்கபூர்வமாக செயல்பட உறுதிபூண்டுள்ளதாக,” திரு ஸெலன்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்