ஜப்பான் கடல் நீரில் பாதிப்பு இல்லை

1 mins read
2d76c6ef-f002-40ea-94e2-01fcc96323f3
ஜப்பானியக் கடலுணவுகளுக்குச் சீனா விதித்த தடையால் 700க்கும் மேற்பட்ட ஜப்பானிய உணவு ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் திறந்துவிட்டதைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுகளை இறக்குமதி செய்யச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனால் 700க்கும் மேற்பட்ட ஜப்பானிய உணவு ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்கோகு டேட்டாபேங்க்’ என்னும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

2011ஆம் ஆண்டு நேர்ந்த ஆழிப் பேரலைப் பேரிடரின்போது அந்த ஆலை அழிந்துபோனது. ஜப்பான் 12 ஆண்டுகளாகத் தேங்கியிருந்த மில்லியன் டன்னுக்கும் மேலான சுத்திகரிக்கப்பட்ட நீரை ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து கடலுக்குள் வியாழக்கிழமை திறந்துவிட்டது. இதனால், உடனடியாகச் சீனா ஜப்பானிலிருந்து வரும் அனைத்து கடலுணவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தது.

ஜப்பானியக் கடலுணவிற்கு ஹாங்காங்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், 316 ஜப்பானிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்கோகு டேட்டாபேங்க்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ஜப்பானியக் கடலுணவிற்குத் தடை விதிக்கவில்லை. ஜப்பானில் இருந்து வரும் கடலுணவுகளின் தரநிலை சரியாக இருப்பதாகவும், பசிபிக் கடலுக்குள் வெளியிடப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரால் தற்போது வரை எந்தவொரு பாதிப்பையும் கண்காணிப்பின்போது கண்டறியவில்லை எனவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, பசிபிக் கடல் நீரை எடுத்து தோக்கியோ மின்சார நிறுவனம் (டெப்கோ நிறுவனம்) வியாழக்கிழமை பரிசோதித்தது. அந்த நீரில் பாதுகாப்பான வரம்புகளுக்குள் கதிரியக்க அளவு இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியது.

குறிப்புச் சொற்கள்