கெய்ரோ: நிதிப் பற்றாக்குறை காரணமாகக் காஸா முனையில் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு உதவித் திட்டங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா உலக உணவு உதவித் திட்டம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் உணவுக்குப் போராடும் சூழலில், கிட்டத்தட்ட 5,00,000 மக்கள் மாதாந்தர உணவு உதவியைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாதாந்தர உதவி பெறும் பயனாளர்களின் எண்ணிக்கையை 1.6 மில்லியனிலிருந்து 1.1 மில்லியனாகக் குறைத்துள்ளதாக உலக உணவு உதவித் திட்டம் தெரிவித்தது.
மேலும், வழங்கிவந்த உணவுப் பங்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், 75,000 குடும்பங்களுக்கான பண உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. சமைக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்ட சூடான உணவுகளின் எண்ணிக்கை 250,000லிருந்து 150,000ஆகக் குறைந்துள்ளது. சென்றடைய கடினமான பகுதிகளில் வாழும் சில குடும்பங்களுக்குத் தற்போது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே சூடான உணவு வழங்கப்படுகிறது.
காஸா மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரான ஏறத்தாழ 1.4 மில்லியன் பேர், கடும் உணவுப் பாதுகாப்பற்ற சூழலையோ அல்லது அதைவிட மோசமான நிலையையோ எதிர்கொண்டு வருகின்றனர். இதில் ஏறத்தாழ 200,000 மக்கள் அவசரகால நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட காஸா போர் நிறுத்த உடன்பாடு, அந்தப் பகுதியின் மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது. எனினும், ஹமாஸ் அமைப்பின் ஆயுதங்களைக் களைவது மற்றும் இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறுவது ஆகியவை உள்ளடங்கிய அமைதி உடன்பாட்டைச் செயல்படுத்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
“போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள போதிலும், இங்குள்ள வாழ்க்கை இன்னமும் கொடூரமாகவே உள்ளது. முறையான இருப்பிட வசதிகளோ, அடிப்படைச் சேவைகளோ, பாதுகாப்போ இங்கு இல்லை,” என்று காஸாவில் உள்ள உலக உணவு உதவித் திட்டத்தின் தற்காலிக நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ் தெரிவித்தார்.
