ஏஐ இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப் பயிற்சிகள் நடத்தவுள்ள ஜி7 நாடுகள்

ஏஐ இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப் பயிற்சிகள் நடத்தவுள்ள ஜி7 நாடுகள்

படம்: புளூம்பெர்க்

16 Oct 2026 - 6:51 pm

1 mins read

பேங்காக்: ஜி7 கூட்டமைப்பின் நிதித்துறைத் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த இணையத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பாவனைப் பயிற்சிகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பான் நிதியமைச்சர் சட்சுக்கி கட்டாயாமா தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள கொள்கை வகுப்பாளர்கள் முயற்சி செய்துவரும் வேளையில் அந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நிதி நிறுவனம் ஒன்றின் முக்கியச் சேவைமீது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையத் தாக்குதல், ஒட்டுமொத்த நிதி அமைப்பின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று அனைத்துலகப் பண நிதியம் எச்சரித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய கட்டாயாமா, “முன்னணி ஏஐ தொழில்நுட்பங்கள் தொடர்பான பாவனைப் பயிற்சிகளை நடத்துவது குறித்து ஜி7 நாடுகளின் நிதித்துறைத் தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். அதற்குத் தற்போது அமைச்சர்நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற அனைத்துலகப் பண நிதியத்தின் வருடாந்தரக் கூட்டத்திற்கு இடையே, ஜி7 வளர்ந்த நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் கட்டாயாமா அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்படும் இணையத் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சோதித்துப் பார்க்க, ஜி7 நிதித்துறை அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பாவனைப் பயிற்சிகள் பயன்படுத்தப்படும் என்று அந்த நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் நிதி அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்