எரிவாயு உருளை வெடித்து மணமக்கள் மரணம்

2 mins read
மணநாளுக்கு மறுநாளே நேர்ந்த துயரம்
00c6702f-ea9d-43fb-b9e0-19eea23d7850
இஸ்லாமாபாத்தில் எரிவாயு உருளை வெடிப்பில் தங்கள் அன்புக்குரியோரைப் பறிகொடுத்த துக்கத்தில் உறவினர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

இஸ்லாமாபாத்: திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்தனர்.

குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என மேலும் அறுவர் அந்த வெடிப்பில் மாண்டுபோயினர்; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் துயரம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் நேர்ந்தது.

வெடிப்பு காரணமாக வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டு தூக்குப் படுக்கைகளில் கொண்டுசென்றனர்.

எரிவாயுக்கசிவு காரணமாக வெடிப்பு நேர்ந்ததாக அவசரகால உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பில் அருகிலிருந்த மூன்று வீடுகளும் சேதமடைந்தன.

முதல்நாளான சனிக்கிழமைதான் தம் மகனின் திருமணம் நடந்ததாக ஹனிஃப் மசிஹ் கூறினார். வெடிப்பு நேர்ந்தபோது புது மணமக்கள், குடும்பத்தினர், விருந்தினர்கள் ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

அதிகாலை 3 மணியளவில்தான் அவர்கள் அனைவரும் உறங்கச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

மாண்டோரில் அவருடைய மனைவியும் மைத்துனியும் அடங்குவர்.

நிகழ்விடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்துள்ள காவல்துறை, வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறது. தடயவியல் துறையினரும் அங்கு அனுப்பப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

“கொண்டாட்ட நிகழ்வு துயரத்தில் முடிந்தது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது,” என்று பாகிஸ்தான் மேலவைத் தலைவர் யூசுஃப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்