சோல்: தென்கொரியாவின் வடக்கு சுங்சியோங் வட்டாரத்தில் உள்ள சீனோன்ஜு நகரில், திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அதிகாலையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
எரிவாயுக் கசிவு காரணமாக அவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வெடிப்புச் சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், போங்ம்யோங்-டாங் என்ற குடியிருப்பு, வர்த்தகப் பகுதியில் உள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டடத்தின் முதல் தளத்தில் நடந்தது.
அந்நேரத்தில், அக்கட்டடத்தில் இருந்த அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது.
வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் வசித்த எட்டு குடியிருப்பாளர்களுக்கு உடைந்த கண்ணாடிச் சில்லுகளால் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
அதன் காரணமாக அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற எழுவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வெடிப்புச் சம்பவத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த வாகனங்கள் நிலைதடுமாறி கவிழ்ந்தன. சுற்றியுள்ள கட்டடங்களின் சன்னல்கள் சிதறின.
தொடர்புடைய செய்திகள்
அதனால் அப்பகுதி முழுவதும் இடிபாடுகள் நிறைந்து காணப்பட்டன.
குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
எரிவாயுக் கசிவு ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

