எரிவாயு ஏற்றுமதி குறைப்பு ஒப்பந்த மீறலல்ல: இந்தோனீசியா

எரிவாயு ஏற்றுமதி குறைப்பு ஒப்பந்த மீறலல்ல: இந்தோனீசியா

படம்: ஏஎஃப்பி

26 Oct 2026 - 8:28 pm

2 mins read

ஜகார்த்தா: சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதியைக் குறைத்த தனது நடவடிக்கையை இந்தோனீசியா தற்காத்துப் பேசியுள்ளது. ஒப்பந்தங்களை மதிப்பதைப் பற்றி தங்களுக்கு யாரும் போதிக்கத் தேவையில்லை என்றும் இந்த விநியோகக் குறைப்பு நடப்பிலுள்ள உடன்பாடுகளை மீறவில்லை என்றும் அது திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

நதுனா கடல் மற்றும் சுமத்ரா பெருநிலப்பகுதியிலிருந்து குழாய் வழியாகச் சிங்கப்பூருக்கு நாள்தோறும் விநியோகிக்கப்படும் 409.55 மில்லியன் சீர்தரக் கன அடியில் ஏறத்தாழ 8 விழுக்காடு, அதாவது அன்றாட அடிப்படையில் 31 மில்லியன் சீர்தரக் கன அடி இயற்கை எரிவாயு ஏற்றுமதியை இந்தோனீசியா குறைத்துள்ளது.

அதை அந்நாட்டின் எரிசக்தி, கனிம வள அமைச்சர் பஹ்லில் லஹடாலியா திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) தெரிவித்தார்.

இந்த விநியோகக் குறைப்பு, நடப்பிலுள்ள ஒப்பந்தங்களின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வரம்புகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறைக்கப்பட்ட 31 மில்லியன் சீர்தரக் கன அடி என்பது ஒப்பந்த விதிகளுக்குட்பட்ட குறைந்தபட்ச வரம்பிற்குள் உள்ளது என்றும் விநியோகத்தை 10 விழுக்காடு குறைத்திருந்தால் மட்டுமே அது ஒப்பந்த மீறலாகக் கருதப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

பராமரிப்பு தொடர்பான பணி முடக்கங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் பஹ்லில், ஒப்பந்தங்களையும் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் மதிப்பதில் இந்தோனீசியா உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ஏற்றுமதி குறைப்பு நிரந்தரமானதா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, அவர் திட்டவட்டமான பதிலை அளிக்கவில்லை.

தற்போதைய சூழல் மாற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய நிலையிலேயே நீடிப்பதாக அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில குறிப்பிட்ட அசாதாரணச் சூழ்நிலைகளில் தரப்பினர் தங்களது ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து விலக்களிக்கக்கூடிய ‘ஃபோர்ஸ் மஜூர்’ (எதிர்பாராத தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கான விதி) விதியை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் பஹ்லில் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தோனீசியா அவ்விதியை தற்போது கையில் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிடவில்லை.

தாங்கள் ஒப்பந்தங்களை மதிப்பதாகவும் எனினும் இத்தகைய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது என்பதால் நிலைமையைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏதேனும் நிலவுகிறதா என்று கேட்கப்பட்டபோது, எந்தவொரு பிரச்சினையோ மோதலோ இல்லை என்றும் மோதல் இருப்பதாகக் கருதுவதற்கு இடமில்லை என்றும் அவர் மறுத்தார்.

சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை இந்தோனீசியா அக்டோபர் 24ஆம் தேதியன்று குறைக்கத் தொடங்கியது.

உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, பாத்தாம், பிந்தான் மற்றும் சுமத்ரா ஆகிய பகுதிகளுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை அது திருப்பிவிட்டதைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்