காஸா சிட்டி: காஸா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படுவதாக பாலஸ்தீனத் தரப்பு தகவல் அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர்.
காஸாவில் தங்கள் ராணுவப் படையினர் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்ற இஸ்ரேலின் பரிந்துரையால் இழுபறி ஏற்படுவதாக அவர்கள் சனிக்கிழமை (ஜூலை 12) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
இஸ்ரேல், காஸா, இருதரப்புப் பேராளர்களும் இம்மாதம் ஆறாம் தேதி கத்தாரில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். 21 மாதங்களாக நீடிக்கும் போரைத் தற்காலிகமாக நிறுத்த ஒப்பந்தம் எட்டுவது இலக்காகும்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் மூண்டது. 60 நாள்கள் நீடிக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டால் அன்றைய தினம் பிணைக்கைதிகளாகப் பிடிபட்டோரில் உயிருடன் இருக்கும் 10 பேர் விடுவிக்கப்படுவர் என்று ஹமாசும் இஸ்ரேலும் கூறியுள்ளன.
எனினும், காஸாவிலிருந்து தனது படைகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ள இஸ்ரேல் மறுப்பதாக பாலஸ்தீனத் தரப்பு தகவல் அறிந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனப் பிணைக்கைதிகளை விடுவிப்பது, காஸாவுக்குக் கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்புவது ஆகியவற்றின் தொடர்பில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக பாலஸ்தீனத் தரப்பு தகவல் தெரிந்த இன்னொருவர் கூறியுள்ளார்.
எனினும், இஸ்ரேலைப் பிரதிநிதிக்கும் பேராளர்க் குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.