ஜெருசலம்: காஸாவில் உள்ள பள்ளி ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக அந்நகரின் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மாண்டோரில் 11 சிறுவர்களும் ஆறு பெண்களும் அடங்குவர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
உயிரிழந்த சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் கட்டடத்தில் பாலஸ்தீன அகதிகள் தங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
காஸா நகரில் இருந்த அந்தப் பள்ளியின் மீது மூன்று ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
இதில் பலர் தீக்கு இரையானதாக அறியப்படுகிறது.
கட்டடத்தின் மேல் மாடியிலும் தரைத்தளத்திலும் ஏவுகணைகள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடந்தபோது மேல் மாடியில் சிறுவர்களும் பெண்களும் இருந்தனர் என்றும் தரைத்தளத்தில் பலர் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இடத்தைச் சுற்றி கிட்டத்தட்ட 6,000 அகதிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பள்ளியை ஹமாஸ் போராளிகள் பயன்படுத்தி வந்ததாகவும் அவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் பலர் மாண்டனர்.
இஸ்ரேலியர்கள் பலரை ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்று பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதுவரை 39,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டனர்.
ஹமாஸ் அமைப்பு வேருடன் அழியும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.