டெல் அவிவ்: இஸ்ரேலியர்கள் ஈராண்டுக்கு முன்னர் ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். துயர நிகழ்வை அனுசரிக்கும் வகையில் அவர்கள் நாடு முழுதும் திரண்டனர்.
ஹமாஸ் தாக்குதலில் மாண்ட இஸ்ரேலியர்களுக்காக டெல் அவிவில் அவர்களின் குடும்பத்தார் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நாடு முழுதும் ஒளிபரப்பப்பட்ட அதில், ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியது. அதில் 1,200க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 251 பேர் பிணையாளிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இனப்படுகொலைக்குப் பிறகு ஒரே நாளில் இஸ்ரேல் சந்தித்த பேரிழப்பு அது.
அதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேலிய ராணுவம் பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டது. அவற்றில் 67,000க்கும் அதிகமானோர் மரணமடைந்ததாக ஹமாஸ் குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது. அந்த எண்ணிக்கை நம்பக்கூடியது என்கின்றன ஐக்கிய நாட்டு நிறுவனமும் மற்ற அனைத்துலக அமைப்புகளும்.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கடும் வலிக்கிடையே வியத்தகு மீள்திறனை இஸ்ரேல் வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறினார்.
போரின் இலக்குகள் எட்டப்படும் என்று அவர் உறுதி தெரிவித்தார். பிணை பிடித்துச்செல்லப்பட்ட அனைவரையும் திரும்பப் பெறுவது, ஹமாஸ் ஆட்சியை அகற்றுவது, இஸ்ரேலுக்கு காஸா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது ஆகியவை அவை என்றார் திரு நெட்டன்யாகு.
இஸ்ரேலின் தென்பகுதியில் ஈராண்டுக்கு முன்னர் ஹமாஸ் நடத்திய கொடுமையான தாக்குதல் அனைவரின் நினைவிலும் அகலாமல் இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார். போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார். அமைதித் திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு என்றார் அவர்.
அமைதி உடன்பாட்டை எட்டுவதற்குத் தயாராய் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் போர் நிறுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் வேண்டும் என அது கோரியது. மீண்டும் போர் மூளக்கூடாது என்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், எகிப்தின் செங்கடல் உல்லாசத்தலமான ஷார்ம் எல் ஷேக்கில் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்புகள் சந்திக்கின்றன. அமைதித் திட்டம் குறித்து இரண்டாம் நாளாக அவை பேச்சு நடத்துகின்றன.