காஸா அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நெருங்குகிறது: நெட்டன்யாகு

2 mins read
85a4b57d-960d-4e32-8e8e-05ae44dcd018
காஸா நகரில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) சென்ற அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்களை நின்று பார்த்துக்கொண்டிருந்த பாலஸ்தீனப் பிள்ளைகள். - படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: காஸா அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நெருங்குவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருக்கிறார்.

இருப்பினும் இன்னும் சில முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்ட அமைதித் திட்டத்தை ஏற்கெனவே முன்வைத்திருந்தார். அதன் முதற்கட்டம் தற்போது நடப்பில் இருக்கிறது.

இரண்டாம் கட்டத்தின்படி, காஸாவிலிருந்து இஸ்ரேல் மேலும் அதிகமான படையினரை மீட்டுக்கொள்ள வேண்டும். அங்கு இடைக்கால நிர்வாகம் நிறுவப்பட்டு, அனைத்துலகப் பாதுகாப்புப் படை பணியில் அமர்த்தப்பட வேண்டும். அதே நேரம், ஹமாஸ் குழு, ஆயுதங்களைக் களைய வேண்டும். அவற்றுடன் மறுநிர்மாணப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் குழு, எஞ்சிய அதன் ஆயுதங்களை முடக்கவோ சேமித்துவைக்கவோ தயாராய் இருக்கக்கூடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்காவும் சமரசப் பேச்சில் ஈடுபட்ட மற்றத் தரப்புகளும் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுமாறு இஸ்ரேலையும் ஹமாசையும் நெருக்குகின்றன.

ஹமாஸ் குழு பிணை பிடித்துச்சென்றோரில் ஒருவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். மாண்ட அந்த இஸ்ரேலியப் பிணையாளியைச் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஹமாஸ் குழுவினரும் தொடர்ந்து தேடிவருவதாக அரபு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

காஸா சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்து இரண்டு மாதமாகியுள்ள நிலையில், விதிமுறைகளை அன்றாடம் அத்துமீறுவதாக இரு தரப்பும் ஒன்றை மற்றொன்று குறைகூறுகின்றன. காஸா வட்டாரத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஞ்சிய பகுதியில், ஹமாஸ் பெரும்பாலும் அதன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அதிபர் டிரம்ப்புடன் பேசப்போவதாகத் திரு நெட்டன்யாகு செய்தியாளர்களிடம் கூறினார். தலைவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சு இம்மாதம் (டிசம்பர் 2025) 29ஆம் தேதி நடைபெறும் என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

திரு நெட்டன்யாகு, ஜெருசலத்தில் ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்சுடன் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) பேச்சு நடத்தினார். காஸாவில் ஹமாசின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் அப்போது மீண்டும் வலியுறுத்தினார். ஹமாஸ், ஏற்கெனவே உறுதிகூறியபடி ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்