கோலாலம்பூர்: துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனின் இரண்டு நாள் மலேசியப் பயணத்தின்போது இரு தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காஸாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. போரால் சீரழிந்துள்ள காஸாவை சீரமைப்புக் குறித்து அவர்கள் பலவாறு ஆலோசனை நடத்தினர்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பதவிக்காலத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் மலேசியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இரு நாடுகளின் தலைவர்களும் காஸாவை மறுபடியும் நிர்மாணிக்கவும் பாலஸ்தீனர்களுக்கு தாங்கள் வழங்கும் ஆதரவுக்கும் உறுதி தெரிவித்தனர்.
புத்ராஜெயாவில் பிப்ரவரி 11ஆம் தேதி இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திரு அன்வார் இப்ராகிம், துருக்கியுடன் மலேசியாவும் இணைந்து காசாவின் சீரமைப்புக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்றார்.
“அதிபர் எர்டோகனிடம் பேசியதுபோல காஸாவின் புனரமைப்புக்கான நிதியை ஏற்பாடு செய்யும் ஜப்பானிய முயற்சியை நாங்கள் ஆதரிப்போம். காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கான கிழக்கு ஆசிய மறுசீரமைப்புத் திட்டத்திற்கு நாங்கள் இணைத் தலைவராக இருக்க ஜப்பான் கேட்டுக் கொண்டது,” என்று அவர் கூறினார்.
ஜனவரியில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
இதற்கிடையே, காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக துருக்கி 100 கப்பல்களை அனுப்பியுள்ளதாக திரு எர்டோகன் தெரிவித்தார்.
“தேவை உள்ளவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம். காஸா, பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை பாராட்ட வேண்டும்,” என்று எர்டோகன் குறிப்பிட்டார்.