காஸாவைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பலகாலம் ஆகும்: ஐநா அதிகாரி

2 mins read
8112c2db-8452-44e9-8808-afb3a153854e
காஸாவின் ராஃபா நகரில் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டியிருந்த மக்கள் அழிந்துபோன கட்டடங்களின்வழி செல்கின்றனர். - படம்: இபிஏ

காஸா: பேரால் சீர்குலைந்துபோயிருக்கும் காஸாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர மிகவும் அதிக காலம் ஆகும் என்று ஐக்கிய நாட்டுச் சபை (ஐநா) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு கணிசமான அளவில் கூடுதலான மனிதாபிமான உதவி காஸாவுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“உணவு, சுகாதாரப் பராமரிப்பு, கட்டடங்கள், சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டும் பேசவில்லை. தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் ஆகிய தரப்பினரும் பழைய நிலைக்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று காஸாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டுச் சபையின் பிரிவில் (UNRWA) தற்காலிக இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் சேம் ரோஸ் பிபிசி ஊடகத்திடம் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து உதவிப் பொருள்களைக் கொண்டு சென்ற குறைந்தது 1,545 லாரிகள் காஸாவுக்குள் நுழைந்ததாக ஐநா தெரிவித்தது.

உணவு, கூடாரங்கள், போர்வைகள், மெத்தைகள், குளிர்காலத்துக்கான ஆடைகள் போன்ற உடனடியாகத் தேவைப்படும் உதவிப் பொருள்கள் அந்த லாரிகளில் இருந்தன. அந்த லாரிகள், பல மாதங்களாக காஸாவுக்குள் நுழைய முடியாமல் போனது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் எரிபொருள் ஏந்தும் 50 லாரிகள் உட்பட உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லும் 600 லாரிகள் தினமும் காஸாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமான ஆறு வார காலத்துக்கு அது பொருந்தும்.

இந்தக் காலகட்டத்தில் ஹமாஸ், 33 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கவேண்டும், இஸ்ரேல் அதன் சிறைகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுவிக்கவேண்டும்.

“காஸாவில் நடப்பதைப் பார்த்து அங்கு ஒவ்வொருவரும் மனதளவில் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். அனைவரும் எதையாவது இழந்திருக்கின்றனர். பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று திரு ரோஸ் சுட்டினார்.

“மறுவாழ்வு தருவதுடன் பழைய நிலைக்குத் திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் அதிக காலம் ஆகும்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்