வாஷிங்டன்: காஸாவுக்கான ஆறு மாத மீட்புத் திட்டத்திற்கு $3.13 பில்லியன் நிதியை (2.45 பில்லியன் அமெரிக்க டாலர்) வழங்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதி வாரியம் ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறும் உறுப்பினர்கள் கூட்டத்தில் அத்திட்டம் தொடர்பான அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியிடப்படும் என ஆக்சியோஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
66 திட்டப்பணிகளை உள்ளடக்கிய அத்திட்டத்தில், தற்காலிகமாக வீடுகள் அமைப்பது, இடிபாடுகளை அகற்றுவது, மருத்துவமனைகளைச் சீரமைப்பது, பொருளியல் மீட்சி, அனைத்துலகப் பாதுகாப்புப் படையைப் பணி அமர்த்துவது ஆகியவை அடங்கும்.
காஸாவில் ஏற்பட்டுள்ள சேதம் $ 44.97 பில்லியன் (35.2 பில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் முழுமையான சீரமைப்புப் பணிகளுக்கு $91.23 பில்லியன் (71.4 பில்லியன் அமெரிக்க டாலர்) தேவைப்படும் என அந்த ஊடகச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட காஸா அமைதி படைக்கு $263.189 மில்லியனுக்கும் (206 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான தொகையை ஒதுக்கயிருப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.
