தற்காப்பு உடன்பாடு செய்துகொண்ட ஜெர்மனி, பிலிப்பீன்ஸ்

2 mins read
55e05893-f3c2-41c5-a2ab-99c1d1452deb
ஜெர்மனியத் தற்காப்பு அமைச்சர் பொரிஸ் பிஸ்டோரியஸும் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடொரோவும் தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: ஜெர்மனியும் பிலிப்பீன்ஸும் தற்காப்பு உறவுகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் இணங்கியுள்ளன.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான நீண்டகால பூசலில் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக்கொள்ள மணிலா நட்பு நாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.

பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ, ஜெர்மானியத் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகிய இருவரும் பெர்லினில் புதன்கிழமை (மே 14) தற்காப்பு ஒத்துழைப்புத் தொடர்பான ஏற்பாடுகளில் கையெழுத்திட்டனர்.

அதன் வழி, இணையப் பாதுகாப்பு, தற்காப்பு ஆயுதம், தளவாடம், ஐக்கிய நாட்டு அமைப்பின் அமைதிப் பாதுகாப்பில் உதவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிலிப்பீன்சும் ஜெர்மனியும் ஒப்புக்கொண்டதாக மணிலாவின் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (மே 15) சொன்னது.

கடந்த ஆண்டு மணிலா சென்ற திரு பிஸ்டோரியஸ், திரு தியோடோரோவைச் சந்தித்து ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்த உறுதிகூறியதை அடுத்து உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

ஜெர்மனியுடன் செய்துகொண்ட தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடும், அமெரிக்காவுக்கு அப்பாற்பட்டு பிலிப்பீன்ஸ் செய்துகொண்ட தற்காப்பு உடன்பாடுகளுள் அடங்கும்.

ஏப்ரல் மாதம் பிலிப்பீன்ஸ் நியூசிலாந்துடன் ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான உடன்பாட்டைச் செய்துகொண்டது. கூடிய விரைவில் கனடாவுடன் அத்தகைய உடன்பாடு செய்துகொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பரில் ஜப்பானுடனும் இருதரப்பு உடன்பாட்டைப் பிலிப்பீன்ஸ் செய்தது. பிரான்ஸுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க அதிபர் ஃபெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தென் சீனக் கடல் ஒட்டுமொத்தமும் தனக்குத் தான் சொந்தம் என்று பெய்ஜிங் கூறிவருவதால் புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய அண்டை நாடுகள் சினமடைந்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இரண்டு ஜெர்மானியப் போர்க் கப்பல்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் அரிய பயணம் மேற்கொண்டு அதன் கடப்பாட்டை வெளிப்படுத்தின.

குறிப்புச் சொற்கள்