பெர்லின்: ஜெர்மனியின் ஹேம்பர்ஃக் நகரில் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் நடத்திய தாக்குதலில் குறைந்து 17 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஹேம்பர்ஃக் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் மே 23ஆம் தேதி நடந்தது.
தாக்குதல் சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிவாக்கில் ரயில் நிலையத்திற்குள் நடந்தது.
கைது செய்யப்பட்ட நபருக்கு 39 வயது என்றும் அவர் ஜெர்மனிய குடியுரிமை கொண்டவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரபரப்பான நேரத்தில் அந்தப் பெண் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் சிலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
17 பேரில் 6 பேருக்குக் கடுமையான காயங்களும் 7 பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டதாகக் காவல்துறை சொன்னது.
அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் அவரைக் கைது செய்யும்போது அந்தப் பெண் அமைதியாக ஒத்துழைத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கத்திக்குத்து தாக்குதலை அப்பெண் தனியாகச் செய்தார் என்று காவல்துறை கூறியது.
தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அரசியல் கொள்கை தொடர்பான தாக்குதல் இது இல்லை என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் மனநல பாதிப்பு உள்ளவரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு நான்கு ரயில்நிலைய தளமேடைகள் மூடப்பட்டன.

