பெர்லின்: ஜெர்மனியின் ஹேம்பர்ஃக் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு மனநல பாதிப்பு உள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ள அந்தப் பெண் 18 பேரைக் கத்தியைக் கொண்டு தாக்கினார்.
கத்திக்குத்துத் தாக்குதலில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
காயமடைந்தவர்களின் வயது 19லிருந்து 85 வயது வரை என்று காவல்துறை தெரிவித்தது.
மே 23ஆம் தேதி மாலை 6 மணிவாக்கில் அந்தப் பெண் தாக்குதல் நடத்தினார். தாக்குதல் நடத்தியவர் 39 வயது ஜெர்மானியக் குடிமகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தும்போது அந்தப் பெண் போதைப்பொருள் அல்லது மது ஏதும் உட்கொள்ளவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (மே 24) அந்தப் பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு அரசியல் காரணம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனி ஆளாகச் செயல்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

