‘ட்ரோன்’, இணையத் தாக்குதல்களைத் தடுக்க ஜெர்மனி புதிய நடவடிக்கை

‘ட்ரோன்’, இணையத் தாக்குதல்களைத் தடுக்க ஜெர்மனி புதிய நடவடிக்கை

1 mins read
13f78e6e-31ab-4167-9ebb-c4a1abb44b2e
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜெர்மனியின் ஷ்ஹொய்டிட்ஸ் நகரில் உள்ள லீப்சிக்/ஹேல் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பணியில் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.. (ஆகஸ்ட் 5, 2026) - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெர்லின்: ரஷ்யாவின் மறைமுகத் தாக்குதல்கள், இணைய ஊடுருவல்களிலிருந்து பாதுகாக்க புதிய விரிவான திட்டங்களை ஜெர்மனி வகுத்து வருகிறது.

ஜெர்மனி விமான நிலையத்தில் அண்மையில் முறியடிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலைத் தொடர்ந்து இத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

“ரஷ்யாவின் இத்தகைய மறைமுகத் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. அவை அதிகரிக்கும். அவற்றை எதிர்கொண்டு நாட்டின் பாதுகாப்பை நம்மால் உறுதிசெய்ய முடியும்,” என்று ஜெர்மனிய உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் தெரிவித்துள்ளார்.

எனினும், அக்குற்றச்சாட்டுகளைப் பொய் என்று மறுத்துள்ள ரஷ்யா, ஜெர்மனிக்கு எதிராகப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அந்நாட்டின் முக்கியப் போக்குவரத்து மையங்கள்,அரசாங்கப் பகுதிகளைப் பாதுகாக்க நகரங்களில் விரைவாகச் செயல்படக்கூடிய ஆளில்லா வானூர்தி எதிர்ப்புப் படைகள் உருவாக்கப்படும்.

மின் நிறுவனங்கள், தற்காப்பு உற்பத்தி ஆலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆளில்லா வானூர்திகளைக் கண்டறிவதுடன், அவற்றை அப்புறப்படுத்துவதற்கான சட்டபூர்வ அதிகாரத்தையும் பெறவுள்ளன.

இணையத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்க ‘சைபர்டோம்’ (Cyberdome) எனப்படும் தேசிய அளவிலான மின்னிலக்கப் பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நாசவேலைகளில் ஈடுபட முயல்பவர்களை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், முக அடையாளம் காணும் கருவி, கண்காணிப்புக் கேமராக்களின் பயன்பாடும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜெர்மனிஆளில்லா வானூர்திஇணையத் தாக்குதல்ர‌ஷ்யாகுற்றச்சாட்டுபாதுகாப்புநடவடிக்கை