வியன்னா: ஐரோப்பா, வடக்கு, தென் அமெரிக்க பயனர்கள் அதிகரிப்புடன், கொலம்பியாவில் உற்பத்தியும் அதிகரித்து வருவதால், உலகளாவிய கொக்கெய்ன் வணிகம் புதிய சாதனை படைத்து வருவதாக வியாழக்கிழமை (ஜூன் 26) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
விரிவான தகவல்கள் கிடைக்கப்பெற்ற ஆக அண்மைய ஆண்டான 2023ஆம் ஆண்டில், கொக்கெய்ன் மேலும் வலுவடைந்ததாக போதை மருந்துகள், குற்றச்செயல்கள் குறித்த ஐநா அலுவலகத்தில் உலக போதைப்பொருள் அறிக்கை குறிப்பிட்டது.
“உற்பத்தி, கைக்கொள்ளுதல், கொக்கெய்ன் பயன்பாடு அனைத்தும் 2023ல் புதிய உச்சத்தை எட்டியது, இது கோகெய்ன் வணிகத்தை உலகில் வேகமாக வளர்ந்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் சந்தையாக மாற்றியது,” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விநியோகத் தரப்பில், உலகளாவிய கொக்கெய்ன் சட்டவிரோத உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு உயர்ந்து 3,708 டன்களுக்கும் அதிகமாகியுள்ளது. முக்கியமாக கொலம்பியாவில் சட்டவிரோத கொக்காச் செடிகளைப் பயிரிட ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. 2022விட கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகமாக சாகுபடி இருந்ததை புதுப்பிக்கப்பட்ட தரவு சுட்டியது.
உலகளவில் கொக்கெய்ன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2023ல் 25 மில்லியன் மக்கள் கொக்கெய்ன் பயன்படுத்தினர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு 17 மில்லியனாக இருந்தது.
குறைந்த செயல்பாட்டு செலவுகள், மருந்து தயாரிப்பவர்கள் அல்லது கடத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் ஆபத்து குறைந்துள்ளது போன்ற காரணங்களால் செயற்கை போதைப்பொருள் சந்தையும் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக அறிக்கை கூறியது.