உலகப் பூசல்கள் 2025ல் உச்சம் தொட்டன: அறிக்கை

உலகப் பூசல்கள் 2025ல் உச்சம் தொட்டன: அறிக்கை

2 mins read
18cdccbf-3810-44a2-8964-bbf6cac91644
கடந்த ஆண்டில் (2025) உலக அளவில் குறைந்தது ஒரு நாடு சம்பந்தப்பட்ட 65 பூசல்கள் இடம்பெற்றதாகப் பூசல் போக்குக் குறித்த ஓஸ்லோ அமைதி ஆய்வு நிலையத்தின் வருடாந்தர அறிக்கை குறிப்பிட்டது.  - படம்: இபிஏ

ஓஸ்லோ: நாடுகளுக்கு இடையில் ஆக அதிகமான பூசல்களை உலகம் சென்ற ஆண்டு (2025) சந்தித்தது. நார்வே ஆய்வொன்று அதனைத் தெரிவித்தது. மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்ததாக அது சொன்னது.

கடந்த ஆண்டில் உலக அளவில் குறைந்தது ஒரு நாடு சம்பந்தப்பட்ட 65 பூசல்கள் இடம்பெற்றதாகப் பூசல் போக்குக் குறித்த ஓஸ்லோ அமைதி ஆய்வு நிலையத்தின் வருடாந்தர அறிக்கை குறிப்பிட்டது. 1946ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.

நாடுகளுக்கு இடையிலான பூசல்களின் எண்ணிக்கையும் கூடியிருந்தது. 2025ல் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் எல்லையோர மோதல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி எட்டாகப் பதிவானது. கடந்த 80 ஆண்டுகளில் அதுவே ஆக அதிகம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைச் சண்டை, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல், கம்போடிய-தாய்லாந்துச் சிக்கல், உக்ரேன்-ர‌‌ஷ்ய பிரச்சினை, சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் முதலியவை அவற்றுள் அடங்கும்.

“துரதிரு‌‌ஷ்டவசமாக நல்ல சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமில்லை,” என்று ஆய்வாளர் சிரி ஆஸ் ரஸ்டட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“எப்போதும் எப்படியாவது முயற்சி செய்து ஏதேனும் நல்லவற்றைக் கண்டுபிடிப்பேன். ஆனால் இம்முறை இயலவில்லை. எண்ணிக்கையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.

கடந்த ஆண்டில் சண்டை அல்லது அரசியல் வன்முறையின் காரணமாகக் கிட்டத்தட்ட 245,000 பேர் உயிரிழந்தனர். கெடுபிடிப் போருக்குப் பிறகு, ஆக அதிகமானோர் மாண்ட ஆண்டுகளின் பட்டியலில் 2025, மூன்றாம் இடத்தில் இருந்தது. சென்ற ஆண்டு பொதுமக்களில் ஏறக்குறைய 76,500 பேர், நேரடித் தாக்குதல்களின் காரணமாக மாண்டுபோயினர். 2024ல் அந்த எண்ணிக்கை 14,200ஆக இருந்தது.

பொதுமக்களிடையே மரண எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததற்குச் சூடானில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை முக்கியக் காரணம். அங்கு டார்ஃபர் வட்டாரத்தில் நடந்த முற்றுகை, படுகொலைச் சம்பவங்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் கொல்லப்பட்டனர்.

கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்த பிறகு, 1994ஆம், 2021ஆம் ஆண்டுகள் அதிக ரத்தக்களறியைச் சந்தித்தன. ரூவாண்டாவில் நடந்த இனப்படுகொலையும் எத்தியோப்பியாவின் திக்ரே வட்டாரத்தில் நடந்த போரும் அவற்றுக்குக் காரணங்களாக அமைந்தன.

ஆப்பிரிக்காவே ஆக அதிகம் பாதிக்கப்பட்ட வட்டாரமாக இருந்தது. கடந்த ஆண்டு அங்கு 29 பூசல்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை உள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்சண்டைபோர்ஆசியாஅமெரிக்கா