தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ல் உச்சம் தொட்டகரியமிலவாயு வெளியேற்றம்

1 mins read
8b906b14-21b4-4842-ad3b-000e0c7883b5
சென்ற ஆண்டில் எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகள் மூலம் 37.4 பில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: கடந்த 2023ஆம் ஆண்டு உலகளவில் எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகளால் கரியமிலவாயு வெளியேற்றம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்ததாக அனைத்துலக எரிசக்தி ஆணையம் (ஐஇஏ) தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நீர்மின்சக்தி உற்பத்தி குறைந்துபோன நாடுகள் அதிக அளவில் புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தியதும் இதற்கு ஒரு காரணம் என்று ஐஇஏ குறிப்பிட்டது.

சென்ற ஆண்டில் எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகளால் 37.4 பில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றப்பட்டதாக ஐஇஏ ஆய்வு மதிப்பீடுகள் காட்டுகின்றன. இது 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.1 விழுக்காடு, அதாவது 410 மில்லியன் டன் அதிகம்.

இந்நிலையில், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை எட்ட வேண்டுமெனில் வரும் ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டியது அவசியம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு எரிசக்தி சார்ந்த கரியமிலவாயு வெளியேற்றம் அமெரிக்காவில் 4.1 விழுக்காடும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 9 விழுக்காடும் குறைந்தன.

மாறாக, சீனாவில் எரிசக்தி சார்ந்த கரியமிலவாயு வெளியேற்றம் 5.2 விழுக்காடு கூடியதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 29) ஐஇஏ வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இதனிடையே, சென்ற ஆண்டு விற்பனையான புதிய கார்களில் ஐந்தில் ஒன்று மின்சாரத்தால் இயங்கக்கூடியது. அதாவது, 14 மில்லியன் மின்சார கார்கள் விற்பனையாயின. இது, முந்திய 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 35 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்