உலகளாவிய அச்சுறுத்தல்கள் அருகில் உள்ளன: அன்வார்

உலகளாவிய அச்சுறுத்தல்கள் அருகில் உள்ளன: அன்வார்

படம்: ராய்ட்டர்ஸ்

03 Nov 2026 - 7:10 pm

2 mins read

கோலாலம்பூர்: உலகில் வேறெங்கோ உருவெடுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியாத அளவிற்குத் தொலைவில் இருப்பதாக மலேசியர்கள் கருதக்கூடாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அண்டை நாடான தாய்லாந்தில் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள், குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பான கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

அருகில் உள்ள வெளிநாட்டு உளவு அமைப்புகளின் செயல்பாடுகளால் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மலேசிய உளவு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் பேசினார்.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதிக்கும் இணையவழித் தாக்குதல்கள், அத்துடன் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் உட்பட வெளிநாடுகளில் ஏற்படும் மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

வளர்ந்து வரும் அனைத்துலக நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள், தங்கள் குடிமக்களுக்கு மூன்று முதல் பத்து நாள்களுக்குப் போதுமான அவசரகால உணவுப் பொருள்களை இருப்பு வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதைப் பிரதமர் அன்வார் நினைவுகூர்ந்தார்.

மலேசியா எதிர்கொள்ளும் அண்மைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநருக்கு உத்தரவிடவுள்ளதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடன்பாட்டிற்கு உட்பட்டு, அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள் இந்தத் தனிப்பட்ட கலந்துரையாடல் நடத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து உளவுத்துறைத் தகவல்களையும் வெளிப்படையாக வெளியிட முடியாது என்றாலும், அச்சுறுத்தல்களுக்கான சாத்தியமான இலக்குகளாகக் கருதப்படும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை பிரதமர் அன்வார் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்