ஜெனீவா: பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வால் உலக வெப்பநிலை மேலும் 0.1 முதல் 0.2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் 2026ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்திலும் 2027 தொடக்கத்திலும் பூமி வழக்கத்திற்கு மாறாக வெப்பமடையும்.
துருக்கியில் காப்31 பருவநிலை உச்சமாநாடு தொடங்கிய வேளையில், இந்த அமைப்பு தனது பருவநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரலாற்றிலேயே ஆக அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலையை நாம் தீவிரப்படுத்துகிறோம் என்றும் எல் நினோ நிகழ்வானது இடர்களைப் பலமடங்கு பெருக்கும் காரணியாக இருக்கும் என்றும் அவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் செலஸ்டே சௌலோ கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட வெப்பநிலை 1.47 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயரும் என்று கோப்பர்நிக்கஸ் கண்காணிப்பு அமைப்பு கணித்துள்ளது. வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஆண்டாகப் பதிவான 2024லும் இந்த வரம்பைக் கடந்து வெப்பநிலை பதிவானது.
தற்போதைய வாக்குறுதிகளை நாடுகள் முழுமையாக நிறைவேற்றினாலும், பூமி 2.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) எச்சரித்துள்ளது. வரலாற்றிலேயே ஆகக் கடுமையான எல் நினோ நிகழ்வு உலகெங்கும் வெப்பநிலை, மழைப் பொழிவு ஆகியவற்றின் போக்கை மாற்றி, வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்குக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.
பூமி வெப்பத்தை ஈர்க்கும் வேகம் தீவிரமடைந்துள்ளதைக் காட்டும் வகையில், கடலின் வெப்பமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெப்பமடையும் கடல்கள் விரிவடைவதாலும் பனிப்பாறைகள் உருகுவதாலும் கடல் மட்டம் வேகமாக உயர்கிறது. அதேவேளையில், முன்கூட்டியே எச்சரிக்கும் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 2025ல் 136ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் 2027 இறுதிக்குள் இத்தகைய அமைப்புகளைக் கொண்டுசேர்க்கும் ஐநாவின் இலக்கிற்கு இந்த வளர்ச்சி வலுச்சேர்க்கிறது.
