ஜப்பானிய ரயில் நிலையத்தில் ஆனந்தமாகப் புல் மேயும் ஆடுகள்

ஜப்பானிய ரயில் நிலையத்தில் ஆனந்தமாகப் புல் மேயும் ஆடுகள்

படம்: டாய்_2512, எக்ஸ்

06 Nov 2026 - 9:44 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள ரயில் நிலையப் பகுதியில் மிதமிஞ்சி வளர்ந்துள்ள புற்பூண்டுகளை அகற்ற இரண்டு ஆடுகள் களமிறக்கப்பட்டுள்ளன. 

அந்த வெள்ளை ஆடுகள், சுறுசுறுப்பான மேய்ச்சலால் சமூக ஊடகங்களில் பேரளவில் வரவேற்பைப் பெற்றுப் பிரபலமாகி வருகின்றன.

ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம், ஷிஞ்சுக்கு வணிக நடுவத்தில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம் அருகே 900 சதுர மீட்டர் காலியிடத்தில் வளர்ந்த களைகளை அகற்ற இத்திட்டத்தைத் தொடங்கியது. அங்கு ஓராண்டு வயதான ‘நாகி’ என்ற ஆண் ஆடும் இரண்டு வயதுடைய ‘பொக்கே’ என்ற பெண் ஆடும் கடந்த மாதம் 9ஆம் தேதி கொண்டுவரப்பட்டன.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இயற்கை முறையில் களைகளை அகற்ற இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

புல் வெட்டும் இயந்திரங்களையும் களைக்கொல்லி மருந்தையும் பயன்படுத்துவதைவிட, ஆடுகள் மேய்வது சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என அது கூறியது.

மதிய உணவு இடைவேளையில் அலுவலக ஊழியர்களும் பள்ளி மாணவர்களும் அங்குத் திரண்டு வந்து ஆடுகளைப் படம் பிடித்து மகிழ்கின்றனர். நேரில் ஆடுகளைப் பார்ப்பது புத்துணர்வளிப்பதாக வருகையாளர்கள் தெரிவித்தனர்.

இச்சோதனைத் திட்டம் வரும் டிசம்பர் மாதம்வரை அல்லது அங்குள்ள புல் முழுதும் தீரும்வரை நீடிக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்ரயில்வேஆடு