வரலாற்றில் முதன்முறையாக தங்க விலை புதன்கிழமை (ஜனவரி 21) அவுன்சுக்கு 4,800 டாலரைத் (6,164 வெள்ளி) தொட்டது.
கிரீன்லாந்து நெருக்கடி, ஜப்பானில் வரிக் கழிவுகள் வழங்கப்பட்டு அரசாங்கம் கூடுதலாகச் செலவு செய்யக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து சரிந்த பங்குச் சந்தை ஆகியவை இதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கையாள தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற போக்கு அதிகரித்துள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கும் தமது நோக்கிலிருந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதுவரை அறவே பின்வாங்கத் தயாராய் இல்லை. கிரீன்லாந்து மீது அமெரிக்கத் தரப்பின் ராணுவம் படையெடுக்க வாய்ப்புள்ளதாக கிரீன்லாந்துப் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெடரிக் நீல்சன் அப்பகுதி மக்களை எச்சரித்துள்ளார். எனினும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. வரிவிதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளில் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை அடங்கும்.
இதனைத் தொடர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்த்தகப் போர் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கிரீன்லாந்து, பல காலமாக டென்மார்க்குக்குச் சொந்தமான பகுதியாக இருந்து வருகிறது.

