தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கத்தின் விலை இறங்கியது, கடைகளில் கூட்டம் கூடியது

2 mins read
1c425226-8df3-4283-b275-4894ccb9040b
அக்டோபர் 20ஆம் தேதி முடிவில், தங்கத்தின் விலை அவுன்சுக்கு $4,381 அமெரிக்க டாலரானது. - படம்: புளூம்பெர்க்

லண்டன்: உலகெங்கும் தங்கத்தை வாங்க அதிகமானோர் கடைகளில் திரளத் தொடங்கியது, அரிய வகை உலோகங்களை வர்த்தகம் செய்வோரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்க வர்த்தகத்தில் அளவுக்கு அதிகமானோர் ஈடுபடுவதாக உலோக நிறுவனமொன்றின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் நிக்கி ‌ஷீல்ஸ், அவரின் வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அக்டோபர் 20ஆம் தேதி, தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டது. அவுன்சுக்குக் கிட்டத்தட்ட $4,400 அமெரிக்க டாலரை அது எட்டியது. தங்கம், மிதமிஞ்சி வாங்கப்படுவதாக மார்க் லோஃபெர்ட் எனும் வர்த்தகர் எச்சரித்தார்.

தங்க விலை அக்டோபர் 21ஆம் தேதி 12 ஆண்டு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அது 6.3 விழுக்காடு சரிந்து அவுன்சுக்கு $4,113.05 அமெரிக்க டாலருக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டது. வார அடிப்படையில் சரிவு 138.77 அமெரிக்க டாலர். அது வரலாறு காணாத சரிவு.

திங்கட்கிழமை (அக்டோபர் 27) சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 11.02க்குத் தங்கவிலை மேலும் குறைந்தது. உடனடியாக வர்த்தகம் செய்யக்கூடிய தங்கத்தின் விலை 1.1 விழுக்காடு குறைந்து அவுன்சுக்கு 4,070.31 அமெரிக்க டாலரானது. சிங்கப்பூரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை $165.70ஆக இருந்தது.

ஏறுமுகமான சந்தையில் தங்கத்தின் நிலையும் அதன் விலையும் திசை திரும்புகிறதோ என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது. ஆனால் தங்கம்தான் சிறந்த முதலீடு என்று பலரும் நம்புகின்றனர். சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா வரை கடந்த வாரம் விலை குறைந்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்கத்தை வாங்கத் திரண்டது அதனைப் பிரதிபலிப்பதாக வர்த்தகர்கள் கூறினர்.

நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலை உயரக்கூடும் என்று பலரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

வர்த்தக நிலையங்கள், முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் முதலியவை தங்க வர்த்தக நிபுணர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. அதனால் தங்க வர்த்தகத் துறையில் திறனாளிகளை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்