ஈரான் போர் குறித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 2) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் தங்கம் விலை 4 விழுக்காடு வரை சரிந்தது.
போர் தொடங்குவதற்கு முன்பு ஓர் அவுன்ஸ் தங்கம் $5,278 ஆக இருந்த நிலையில், தற்போது அது $4,695 ஆகக் குறைந்துள்ளது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விலை அதிகரித்திருந்தாலும், மார்ச் மாத இறுதியில் ஒரே வாரத்தில் தங்கம் விலை 10 விழுக்காட்டுக்கும் மேலாகச் சரிந்தது. இது 2008 நிதி நெருக்கடி காலத்தை விடப் பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
முதலீட்டாளர்களின் எதிர்வினை
பங்குச்சந்தைகள், பிற சொத்து மதிப்புகள் குறைந்தபோது, பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகப் பல முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றதே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
எனினும், விலை வீழ்ச்சியை ஒரு நல்வாய்ப்பாகக் கருதிப் பல புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் நுழைந்துள்ளனர். இதன் விளைவாக, ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களிடையே தங்கம் பரிவர்த்தனை 60 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.
விலை வீழ்ச்சிக்கான காரணங்கள்
துருக்கி மத்திய வங்கி தனது நாணயமான ‘லிரா’வை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கிட்டத்தட்ட 60 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வட்டி தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து, முதலீட்டாளர்கள் பத்திரங்கள், டாலர் பக்கம் நகர்கின்றனர்.
சீனா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாகத் தங்கத்தை வாங்குவதைக் குறைத்துள்ளதும், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் எரிசக்தி செலவுகளுக்காகத் தங்க இருப்பைக் குறைப்பதும் இந்த வீழ்ச்சிக்குக் கூடுதல் காரணங்களாகும்.
தொடர்புடைய செய்திகள்
தங்கம் முதலீடு நீண்ட காலப் பாதுகாப்பு அரண்
விலை குறைந்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
துருக்கி போன்ற நாடுகள் தங்களது பொருளியலை நிலைப்படுத்தத் தங்கத்தை விற்பனை செய்தாலும், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வலுப்படுத்த இதனை நல் வாய்ப்பாகப் பார்க்கின்றனர்.

