தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சீன அதிபருடனான உரையாடலில் அதிக முன்னேற்றம் எனக் கூறும் டிரம்ப்

சீன அதிபருடனான பேச்சில் நல்ல முன்னேற்றம்: டிரம்ப்

2 mins read
a06e9220-3f91-4c57-b980-4eed5a8ad9b2
அமெரிக்காவில் வசிப்போர் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அதன் சேவையை 2025 ஜனவரிக்குள் நிறுத்துமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தொலைபேசியில் உரையாடியபோது பல விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

டிக்டாக் உடன்பாட்டை ஏற்றுக்கொள்வது, ர‌‌ஷ்ய-உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, வர்த்தகம், ஃபென்டனைல் உட்பட பல விவகாரங்கள் குறித்துப் பேசியதாக அவர் சொன்னார்.

‘ட்ரூத் சோ‌ஷியல்’ எனும் சமூக ஊடகத்தில் திரு டிரம்ப் அந்தக் கருத்துகளைப் பதிவிட்டார்.

“தொலைபேசி அழைப்பு மிகவும் நன்றாக இருந்தது. மீண்டும் தொலைபேசியில் உரையாடுவோம். டிக்டாக் உடன்பாடு எட்டப்பட்டதற்குப் பாராட்டுத் தெரிவிக்கிறோம். ஏபெக் உச்சநிலை மாநாட்டில் சந்திக்க இருவரும் ஆவலோடு இருக்கிறோம்,” என்றார் அவர்.

ஏபெக் மாநாடு அடுத்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெறவுள்ளது.

வா‌ஷிங்டன், தன்னிச்சையாகத் தீர்வைகள் விதிப்பதை நிறுத்த வேண்டும் என்று திரு டிரம்ப்பிடம் திரு ஸி சொன்னதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது. டிக்டாக் விவகாரம் குறித்த சமரசப் பேச்சை வரவேற்பதாக அது சொன்னது. தலைவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாகச் சீன ஊடகம் குறிப்பிட்டது.

அமெரிக்காவில் வசிப்போர் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அதன் சேவையை 2025 ஜனவரிக்குள் நிறுத்துமாறு நாடாளுமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

நிறுவனத்தின் உரிமையாளரான சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) அமெரிக்காவில் இருக்கும் அதன் சொத்துகளை விற்கவில்லை என்றால் அவ்வாறு செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதனைச் சட்டமாக்க மறுத்துவிட்டார் திரு டிரம்ப்.

“டிக்டாக்கை எனக்குப் பிடிக்கும்; நான் தேர்தலில் வெற்றிபெற அது உதவியது,” என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.

டிக்டாக் உடன்பாடு குறித்த முக்கியக் கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. நிறுவனத்தின் உரிமைக்கட்டமைப்பு எவ்வாறு இருக்கும், அதில் எவ்வளவு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும், அமெரிக்க நாடாளுமன்றம் எந்த அளவுக்கு ஒப்புக்கொள்ளும் என்பன இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்