கோலாலம்பூர்: மலேசியாவில் தரவு நிலைய வளாகங்களை அமைக்கவும் தூய எரிசக்தி, நீர்ப் பாதுகாப்பு, ஊழியர்களுக்கான திறன் பயிற்சிகள் முதலியவற்றை வழங்கவும் கூகல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக 2027 முதல் 2028 வரையிலான காலகட்டத்தில் 15 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளதாக ஆல்ஃபபெட் நிறுவனத்தின் துணை அமைப்பான கூகல் புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் புதிய வளாகங்களை அமைக்க கூகல் திட்டமிடுகிறது. சிலாங்கூரின் எல்மினா வணிகப் பூங்காவில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் வளாகத்துடன் இந்தப் புதிய நிலையங்கள் இணையும்.
“இந்த முதலீடு மலேசியா முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களுடன் ஒத்துப்போகிறது; நாடு முழுதும் புதுமைகளின் பலன்களைக் கொண்டுசேர்ப்பதற்கான அடிப்படைக் கணினி ஆற்றலை வழங்குவதோடு, எங்களின் செயல்பாடுகள் விரிவடையும்போது உள்ளூர் மின்சாரம், நீர் ஆதாரங்களையும் இது மேம்படுத்தும்,” என்று ஆல்ஃபபெட் மற்றும் கூகலின் தலைவரும் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான திருவாட்டி ரூத் போரட் கூறினார்.
இந்த வளாகங்களின் கட்டுமானப் பணிகள், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஆண்டுக்குச் சராசரியாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிக்கும் என்றும் ஆண்டிற்கு 37,000க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் கூகல் தெரிவித்தது.
இந்த மையங்கள் செயல்படத் தொடங்கியதும், ஆண்டிற்கு 9,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளைத் தக்கவைக்கும் என்றும், இவற்றின் சராசரி ஊதியம் தேசிய இடைநிலைச் சம்பளத்தைவிட 45 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தேசிய மின்கட்டமைப்பில் ஒரு கிகாவாட்டுக்கும் அதிகமான தூய எரிசக்தித் திறனைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூகல் கூறியது.
“கூகல் தனது தரவு நிலைய வளாகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 100 விழுக்காடு கட்டணம் செலுத்துவதோடு, அவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கத் தேவையான நேரடி உள்கட்டமைப்புச் செலவையும் ஏற்றுக்கொள்ளும்; அத்துடன் பொருந்தக்கூடிய அனைத்து உள்ளூர் விதிமுறைகளையும் பின்பற்றும்,” என்று அது குறிப்பிட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800,000 மலேசியர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நான்கு புதிய திட்டங்களையும் கூகல் அறிவித்தது.
