அனுமதியின்றிக் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களை அரசாங்கம் தடைசெய்கிறது: அன்வார்

சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களை அகற்ற உள்ளூர் கவுன்சிலுக்கு அனுமதி உண்டு

அனுமதியின்றிக் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களை அரசாங்கம் தடைசெய்கிறது: அன்வார்

3 mins read
சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான ஒரு பேரணி கடந்த சனிக்கிழமை நடைபெறவிருந்தது. அதை ரத்து செய்யும் உத்தரவுகளை மீறி போராட்டத்தைத் தொடர திட்டமிட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டனர்
4575a313-31af-4e8d-b1f0-3e6537c512fe
புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) உரையாற்றிய அன்வார், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளூர் கவுன்சில்களுக்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது என்றார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: அனுமதியின்றி எந்தவொரு வழிபாட்டுத் தலமும் கட்டப்படுவதையோ செயல்படுவதையோ அரசாங்கம் தடைசெய்வதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமாகக் கட்டப்படும் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் அகற்றுவதற்கு உள்ளூர் கவுன்சிலுக்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது என்றார் அவர்.

புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) உரையாற்றிய அன்வார், “இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால், மலேசியா சட்டவிதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது,” என்றார்.

புனித மரத்துக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த ஒரு வழிபாட்டு இடத்தை, அது 200 ஆண்டுகள் பழமையானது என்பதால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு பக்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்ததை அவர் குறிப்பிட்டார்.

“மரத்துக் கீழே இருக்கிறது என்ற காரணம் செல்லாது. அது முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்,” என்றார் அவர்.

நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி, இன உணர்வைத் தூண்டிய அமைச்சர் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் அவர் சாடினார்.

“சிலர் மலேசியாவில் இந்துகள் தங்கள் சமயத்தைப் பின்பற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் இந்துக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் முன்னைய ஆட்சியின்போது இதுசார்ந்த விவகாரங்களைப் பேசினார்.

வழிபாட்டுத் தல விவகாரத்தில் நிதானமும் பேச்சுவார்த்தையுமே தீர்வு என்று  தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாடாங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தல விவகாரத்தில் நிதானமும் பேச்சுவார்த்தையுமே தீர்வு என்று  தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாடாங் அறிக்கை வெளியிட்டுள்ளார். - படம்: மக்கள் ஓசை

சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான ஒரு பேரணி கடந்த சனிக்கிழமை நடைபெறவிருந்தது. அதை ரத்து செய்யும் உத்தரவுகளை மீறி போராட்டத்தைத் தொடர திட்டமிட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் சட்டத்திற்கும், உள்ளூர் அதிகாரிகளின் அதிகார வரம்புக்கும் உட்பட்டே தீர்க்கப்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாடாங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலான அவசர நடவடிக்கைகளைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

உணர்ச்சிகரமான தூண்டுதல்கள் அல்லது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொறுப்பற்ற கருத்துகளால் தேசிய ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது. பொதுவெளிகளை வெறுப்புணர்வையோ அல்லது பிரிவினையையோ விதைக்கப் பயன்படுத்துவதை அரசு அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் நோக்கில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தேசிய ஒற்றுமைத் துறை முழு ஆதரவை வழங்கும் என்று திரு ஆரோன் தெரிவித்தார்.

அண்மையில் இந்த விவகாரம் மலேசியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இந்து சமூகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

மலேசியர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறவும் அரசாங்கத்தை விமர்சிக்கவும் சுதந்திரம் உள்ளது என்றும், ஆனால் சட்டத்தை மீறும் அல்லது இன பதட்டங்களைத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்தின் முழு பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்றும் அன்வார் கூறினார்.

கடந்த வாரம், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ், நாடு முழுவதும் உள்ள பல இந்து கோயில்கள் இன்னும் அதிகாரபூர்வ வழிபாட்டுத் தலங்களாக அரசாணையில் வெளியிடப்படவில்லை என்றும் அதற்கு பெரும்பாலும் தீர்க்கப்படாத வரலாற்று நில நிர்வாக சிக்கல்கள் காரணம் என்றும் சொன்னார்.

வழிபாட்டுத் தலங்கள் பல பல தசாப்தங்களுக்கு முன்னர் காலனித்துவம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் தோட்டப் பகுதிகளில் கட்டப்பட்டவை. அவை சட்டவிரோதமானவை அல்ல என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்