தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பால உச்சநேர நெரிசலை 70% வரை குறைக்க மலேசியா நம்பிக்கை

2 mins read
485fd66c-77df-4268-ad4e-673447a9d258
உலகில் ஆக அதிகமாக மக்கள் கடக்கும் இடமாக ஜோகூர் பாலம் உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசிய அரசாங்கம், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான பாலத்தில் உச்ச நேரங்களில் ஏற்படும் நெரிசலை 70 விழுக்காடு வரை குறைக்க நம்பிக்கை கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு, கடற்பாலத்தைக் கடக்கும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு மலேசியா பல வகையில் திட்டமிட்டு தயாராகி வருகிறது.

அந்நாட்டின் உள்துறை துணைத் தலைமைச் செயலாளரான (கொள்கை மற்றும் கட்டுப்பாடு) மக்ஸான் மஹ்யூதின், கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு கட்டங்களாக உச்சநேர நெரிசலைக் குறைக்கும் 50 முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை 58 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஜோகூர் பாலத்தில் அதிகாலை 3.45 மணிக்கும் அதிகாலை 4.30 மணிக்கும் இடையே நெரிசல் ஏற்படும். தற்போது காலை 6.30 மணியிலிருந்து நெரிசல் தொடங்குகிறது என்றார் அவர்.

முன்பு தனிப்பட்டவர்கள், சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (சிஐகியூ) வளாகத்தைக் கடந்து செல்ல மூன்று மணி நேரத்திற்கு மேல் செலவிடுவார்கள். ஆனால் இன்று அது, ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக குறைந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

நெரிசலை குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டங்கள் நிறைவுபெறும் என அரசாங்கம் நம்பிக்கையோடு உள்ளது.

இதனால் காத்திருக்கும் நேரம் மேலும் குறையும் என்று ஜோகூர் பாலத்தை இணைக்கும் சிஐகியூ வளாகத்தைச் சுற்றிப் பார்த்த பிறகு திரு மக்ஸான் செய்தியாளர்களிடம் கூறினார்.

மோட்டார்சைக்கிள், பேருந்து, கார்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் கியூஆர் குறியீடு சோதனை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது 16 கியூஆர் சாதனங்கள் ஜோகூர், சிங்கப்பூர் ஆகிய இரண்டின் எல்லை நுழைவுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

சிஐகியூ வெளியேறும் நுழைவுத் தடங்களில் தற்போது ஆறு கியூஆர் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இறுதிக்குள் கியூஆர் சாதனங்களுடன் 100 தடங்கள், 50 வெளியேறும் பாதைகள், 50 நுழைவுப் பாதைகளுக்கு திட்டமிட்டுள்ளோம் என்று மக்ஸான் மஹ்யூதின் தெரிவித்தார்.

ஜோகூர் நெரிசலைக் கவனிப்பதற்காக துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தலைமையில் மார்ச் 3ஆம் தேதி கூடும் சிறப்புக் குழு கியூஆர் கட்டமைப்புகளுக்காக கொள்முதல் முறைகள் குறித்து முடிவு செய்யும்.

மோட்டார் சைக்கிள், பேருந்து தடங்களில் கியூஆர் குறியீடு நல்ல பலன்களை ஏற்படுத்தியுள்ளன. நெரிசல் 40 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளதாக மக்ஸான் மஹ்யூதின் குறிப்பிட்டார்.

மேலும் ஒன்று முதல் மூன்று மணி வரையிலான காத்திருக்கும் நேரம் அரை மணி நேரத்துக்கும் கீழ் குறையும். இதனால் லாரி, தனியார் கார்களுக்கும் கியூஆர் குறியீட்டை விரிவுபடுத்தும் திட்டம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜோகூர் பாலம், உலகிலேயே ஆக அதிக அளவில் மக்கள் கடந்து செல்லும் இடமாக உள்ளது.

இந்தப் பாலம் வழியாக நாள்தோறும் ஜோகூரிலிருந்து சிங்கப்பூரின் உட்லண்ட்சுக்கு 350,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்