ஆசியான் முழுவதும் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் முயற்சியாக சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் புதிய பங்காளித்துவ உடன்பாடு காணப்பட்டது.
அந்த உடன்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் பிப்ரவரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி ஆற்றலைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட அனைத்துலகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகவை (ஐரினா), சிங்கப்பூரில் முதலீட்டு மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
2026 பிற்பகுதி அல்லது 2027 முற்பகுதியில் மாநாடு நடைபெறும் எனத் தெரிகிறது. அந்த மாநாட்டில் முதலீட்டாளர்களுக்கு ஏற்புடைய திட்டங்கள் அடையாளம் காணப்படவிருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கான முயற்சிகள், தொழில்மயமாகி பொருளியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது.
ஐரினாவின் நாடுகள் பங்கேற்பு மற்றும் பங்காளித்துவத்திற்கான இயக்குநர் குர்புஸ் கோனுல், புதிய முயற்சிகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விவரித்தார்.
தொழில்துறை பூங்காக்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை செயல்முறைகளை மின்மயமாக்குதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அம்சங்களுக்கான உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய ஆலோசனைகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நோக்கங்கள் அடையாளம் காணப்படும். கொள்கைகளை வகுப்பதற்கான பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி, தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்பெர் எனும் சிந்தனைவாதிகளின் அமைப்பின் 2024ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஆசியானில் மின்சாரத்துக்கான தேவை 2023ஆம் ஆண்டைவிட 2030ஆம் ஆண்டுவாக்கில் 41 விழுக்காடு அதிகரிக்கவிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இவ்வட்டாரத்தின் மக்கள்தொகை பெருக்கத்தால் பசுமை எரிபொருளைப் பகிர்வதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

