டாவோஸ்: கிரீன்லாந்து தொடர்பாக ‘எதிர்கால ஒப்பந்தக் கட்டமைப்பு’ ஒன்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள்மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியைத் திரு டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார்.
திரு டிரம்ப்பின் அறிவிப்பை டென்மார்க் வரவேற்றுள்ளது. “இன்றைய நாள் சிறப்பாக இருந்தது, கிரீன்லாந்தை அமெரிக்கா ஒருபோதும் வாங்க முடியாது,” என்று டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக் ரஸ்முசென் தெரிவித்தார்.
இருப்பினும், ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இதனால் கிரீன்லாந்தை அமெரிக்கா நிர்வகிக்குமா, சொந்தம் கொண்டாடுமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் ஒப்பந்தக் கட்டமைப்பைச் சற்று கடினமான ஒன்று என்று நேட்டோ அமைப்பின் தலைவர் மார் ரூட் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக அமெரிக்காவுடன் இணைக்கமாட்டோம் என்று திரு டிரம்ப் டாவோசில் நடந்த உலகப் பொருளியல் மாநாட்டில் தெரிவித்தார். இதையடுத்து நேட்டோ அமைப்பு அவரிடம் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியது.
“இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அது அமெரிக்காவுக்கும் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுக்கும் நன்மை தரும்,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
கிரீன்லாந்தில் உள்ள தளங்கள், அமெரிக்காவின் பாதுகாப்பு போன்றவை குறித்துக் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
துணை அதிபர் ஜேடி வேன்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இனி கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று திரு டிரம்ப் பதிவிட்டார்.
பொருளியல் மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், “இந்த ஒப்பந்தம் அனைவரையும் நல்ல நிலையில் அமர்த்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குக் காலாவதி இல்லை,” என்று கூறினார்.
டென்மார்க்கும் கிரீன்லாந்தும் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல, அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று கூறிவருகின்றன.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து முக்கியம் எனத் திரு டிரம்ப் கூறிவருகிறார் . கிரீன்லாந்து அமைந்திருக்கும் இடம், அங்குள்ள கனிம வளங்கள் ஆகியவையே அதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதனை மற்ற நாடுகள் கைப்பற்றாமல் இருப்பதற்கு அமெரிக்கா திட்டமிடுகிறது.

