ஆஸ்திரேலியாவில் தீவிர வலதுசாரி கட்சிக்கு வலுக்கும் ஆதரவு

ஆஸ்திரேலியாவில் தீவிர வலதுசாரி கட்சிக்கு வலுக்கும் ஆதரவு

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 2:05 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகித அதிகரிப்புக்கு மத்தியில், பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தலைமையிலான மத்திய-இடதுசாரி அரசாங்கத்துக்கான ஆதரவு சரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீவிர வலதுசாரி ‘ஒன் நேஷன்’ கட்சிக்கான ஆதரவு தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

‘தி ஆஸ்திரேலியன்’ நாளிதழ் வெளியிட்ட அண்மைய ‘நியூஸ்போல்’ கருத்துக்கணிப்பில், ஆளும் தொழிலாளர் கட்சிக்கான ஆதரவு 27 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், ‘ஒன் நேஷன்’ கட்சி 28 விழுக்காட்டு ஆதரவுடன் தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பாரம்பரிய பிரதான பழமைவாதக் கூட்டணிக்கான ஆதரவு சற்றே உயர்ந்து 21 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த வாரம் 1,200 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பின் பிழை வரம்பு ஏறத்தாழ 3.2 விழுக்காட்டுப் புள்ளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பால் தீவிரமடைந்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி 2026ஆம் ஆண்டின் ஐந்தாவது வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ள நிலைக்கு ஒரு நாள் முன்னதாக இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

தொடர் விலைவாசி உயர்வு, அதிகக் கடன் செலவுகளுடன் வீடுகளின் விலைச் சரிவும் இணைந்திருப்பது பயனீட்டாளர்களின் நம்பிக்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

முக்கியக் கட்சிகளின் அரசியல் தலைவர்களுக்கான நிகர ஆதரவு மதிப்பீடு எதிர்மறை நிலையிலேயே நீடிப்பதை நியூஸ்போல் வெளிப்படுத்தியுள்ளது. இதில் பிரதமர் அல்பனிஸ் ஆகக் குறைந்த அளவாக மைனஸ் 23 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து மத்திய-வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் மைனஸ் 10 புள்ளிகளையும் ஒன் நேஷன் கட்சியின் தலைவர் செனட்டர் பாலின் ஹான்சன் மைனஸ் 1 புள்ளியையும் பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்