டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையிலுள்ள ஈரானின் கெஷும் தீவை அமெரிக்கா தாக்கியதை அடுத்து வளைகுடா நாடுகள் விழிப்புநிலையில் உள்ளன.
புதன்கிழமை (நவம்பர் 18) கடுமையான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை எதிர்கொள்வதாகக் குவைத் கூறியது.
பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
பஹ்ரேனிலுள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிக் காவற்படை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதற்கு அடுத்த நாள், ஈரானியத் தாக்குதல்களைத் தனது வான் தற்காப்புப் படைகள் இடைமறித்ததாக பஹ்ரேன் கூறியது.
உலக எரிசக்திப் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவும் ஈரானும் மோதுகின்றன.
கெஷும் தீவிலுள்ள ஏவுகணைத் தளத்தை அமெரிக்கப் போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் தெரிவித்தது. அமெரிக்க வீரர்களையும் சொத்துகளையும் ஈரான் குறிவைத்ததற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, வாஷிங்டனில் கதிரியக்க அல்லது வேதிப்பொருள் கலந்த வெடிகுண்டைப் பயன்படுத்த ஈரான் திட்டமிடுவதாக வெளியான தகவல்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 17ஆம் தேதி கூறினார்.
அது உண்மை என்றால் ஈரான் முன்னெப்போதும் இல்லாத விலையைக் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரித்தார். ஆனால் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி இதனை ஈராக்கியப் போர் பாணியிலான பரப்புரை என மறுத்தார்.
பஹ்ரேனிலுள்ள அமெரிக்கப் படைகளின் ரேடார் கட்டமைப்பை ஆளில்லா வானூர்திகளால் தாக்கியதாகவும் அமெரிக்க ஆளில்லா வானூர்தியைக் கைப்பற்றியதாகவும் புரட்சிக் காவற்படை தெரிவித்தது.
இந்நிலையில், வட்டாரத்திற்கு ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ விமானந்தாங்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதன் மூலம் அங்குள்ள அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் குழுக்களின் எண்ணிக்கை மூன்றுக்கு உயர்ந்துள்ளது.
சீனாவின் ஷென்சென் நகரில் திரு டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு உச்சநிலை மாநாட்டிற்கு முன்னர் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
தலைவர்கள் மூவரும் உலக அமைதி குறித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானியப் போர் பற்றி விவாதிக்கப் போவதாகவும் திரு அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
