பெங்களூரு: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான கடுமையான குடிநுழைவுத் தடைகள் மற்றும் வேலையிழப்பு அச்சம் காரணமாக, அங்குப் பணியாற்றிய இந்திய, சீனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் தாயகம் திரும்பி வருகின்றனர்.
எச்-1பி தற்காலிக வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், வேலையிழந்த 60 நாள்களுக்குள் வேறு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி நிலவுகிறது. மேலும், விசா புதுப்பித்தல் மற்றும் நீட்டிப்புக்கான கட்டணங்களை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளதால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதைக் குறைத்து வருகின்றன.
இந்த நிச்சயமற்ற சூழலால், கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த தீபக் போன்ற ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலை மற்றும் வீடுகளைத் துறந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த ‘எக்ஸ்ஃபெனோ’ திறனாளர் ஆலோசனை நிறுவனத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 9,800ஆக இருந்த இந்தியத் தொழில் வல்லுநர்களின் வருகை, 2025ஆம் ஆண்டில் 15,100 ஆக உயர்ந்துள்ளது.
2026ஆம் ஆண்டில் இதுவரை 7,300 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இதேபோல, சீனாவிலிருந்து அமெரிக்கா சென்ற மாணவர்களில் 536,000 பேர் படிப்பை முடித்துவிட்டு 2025ஆம் ஆண்டில் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமேசான், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய எச்-1பி விசா விண்ணப்பங்களைக் குறைத்துள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்க வேலைச்சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்பும் இந்திய வல்லுநர்களுக்குச் சம்பளக் குறைவு ஏற்பட்டாலும் இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 2,000 உலகளாவிய திறன் மையங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பல வல்லுநர்கள் இந்த மாற்றத்தைச் சுயதொழில் தொடங்குவதற்கும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்குமான வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர்.


