தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்1-பி விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே: அமெரிக்கா

2 mins read
99e78928-4bb2-415d-906c-c4f22767e28d
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தற்போது அந்த விசா வைத்திருப்போர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித்துறைச் செயலாளர் கேரலின் லீவிட் தெளிவுப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் தற்போது இருப்போர், தற்காலிகமாக வெளிநாடுகளில் இருப்போருக்கு இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என எக்கனாமிக் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்டோர் அமெரிக்கா திரும்ப அக்கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்று திருவாட்டி லீவிட் கூறினார்.

மேலும், எச்-1பி விசாவுக்கான புதிய 100,000 டாலர் கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்தத் தேவையில்லை என்றும் அது புதிய விண்ணப்பங்களின்போது ஒருமுறை செலுத்தவேண்டிய கட்டணம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது எச்-1பி விசா வைத்திருப்போருக்குப் பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றம் இல்லை என்றும் அவர் சுட்டினார்.

ஏற்கெனவே இருக்கும் எச்-1பி விசாவைப் புதுப்பிப்போருக்கும் பாதிப்பு இல்லை என்றும் திருவாட்டி லீவிட் சொன்னார். அடுத்தகட்ட எச்-1பி விசா விண்ணப்பங்களுக்குத்தான் புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றும் அவர் விளக்கினார்.

“வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோர் உட்பட ஏற்கெனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அமெரிக்கா திரும்ப இக்கட்டணத்தைச் செலுத்தத் தேவையிருக்காது,” என்று திருவாட்டி லீவிட் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

இச்செய்தி ஆயிரக்கணக்கான நிபுணத்துவப் பணியாளர்களுக்கு நிம்மதி தரும் ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு இது பொருந்தும். எச்-1பி விசா வைத்திருப்போரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இந்தியர்கள்.

எச்-1பி விசா கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் பதற்றமும் குழப்பமும் நிலவின. தங்களின் வேலை, பயணத் திட்டங்களுக்கு இடையூறு வரக்கூடும் என்று அமெரிக்காவில் நிபுணத்துவப் பணிகளில் இருக்கும் இந்தியார்களிடையேயும் அவர்களின் குடும்பத்தாரிடையேயும் கவலை எழுந்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சு, “புதிய விதிமுறைகளால் எழக்கூடிய முழுப் பின்விளைவுகளை சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளும் ஆராய்கின்றன. இந்தியத் தொழில்துறையும் அவற்றில் அடங்கும். அது, இப்போழுதே எச்-1பி விசா திட்டம் குறித்து நிலவும் கருத்துகள் குறித்த ஐயங்களைத் தெளிவுபடுத்தும் ஆரம்பகட்ட ஆய்வை நடத்தியிருக்கிறது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்