மாராங்: ஜனவரி 1ஆம் தேதி கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து முகைதீன் யாசின் விலகியதைத் தொடர்ந்து, பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியைப் பாஸ் கட்சி தொடர்ந்து வழிநடத்தும் என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
முந்தைய பாஸ் மாநாட்டில், பெரிகத்தான் கூட்டணிக்குப் பாஸ் கட்சி தலைமை தாங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
“பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணித் தலைவராக பாஸ் இருக்க வேண்டும் என்பது பாஸ் மாநாட்டின் தீர்மானம்,” என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மஸ்ஜித் ருசிலாவில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முகைதீனின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அப்துல் ஹாடி கூறினார். மேலும் பாஸ் ஏற்கெனவே அந்தப் பதவிக்கு ஒரு வேட்பாளரை நினைவில் வைத்துள்ளது என்றும் கூறினார்.
புதிய தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்க பாஸ் கட்சியின் அதிகாரபூர்வ கூட்டத்திற்கு பாஸ் இன்னும் எந்த அழைப்பையும் பெறவில்லை என்றும் மாராங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.
கூட்டத்தைக் கூட்டுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு கூட்டணிக்குள் உள்ள நிர்வாக மற்றும் மேலாண்மை விவகாரங்களே காரணம் என்று அவர் கூறினார். ஆனால் இந்தப் பிரச்சினை ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு ஹாடி கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.

