ஹாலோவீன் துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலி, 94 பேர் காயம்

ஹாலோவீன் துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலி, 94 பேர் காயம்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 12:41 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாடெங்கும் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 24 பேர் மாண்டனர், 94 பேர் காயமுற்றனர்.

டெக்சஸ் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) அதிகாலையில் நிகழ்ந்த மூன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர் என்பதையும் 15 பேர் காயமடைந்தனர் என்பதையும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கலிஃபோர்னியா தொடங்கி டெலவேர் வரை நீடித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இரவு விடுதிகள், மாறுவேட உடைக் கடைகள், விளையாட்டரங்க வளாகங்களுக்கு வெளியே, கல்லூரி வளாகங்களுக்கு அருகே நிகழ்ந்தன.

மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகியவற்றுடன் பொதுமக்களுக்குத் துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பது ஹாலோவீன் பண்டிகையின்போது நிகழும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிறுவர்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதிதான் ஆண்டிலேயே மிகவும் ஆபத்தான நாளாக உள்ளது என்று கூறிய அவர், அன்று மாலை சிறுவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து முன்பின் தெரியாதோருடன் பழகுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

டெட்ராய்ட் நகரில், ஹாலோவீன் இனிப்புகளைக் கேட்டுப் பெற்றுத் திரும்பிய ஐந்து வயதுச் சிறுமி, தமது அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது மார்பில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. தமக்குக் குண்டு பாய்ந்திருப்பதை அச்சிறுமியே தன் தாயாரிடம் கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அச்சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஃபுளோரிடா மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு காரணமாக 13 பேர் காயமடைந்ததோடு, இருவர் மாண்டனர். ஹாலோவீன் கொண்டாட்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது 17 வயதுச் சிறுமி ஒருவர் தோட்டா பாய்ந்ததில் கொல்லப்பட்டார். மற்றொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 20 வயது இளையர் ஒருவர் கொல்லப்பட்டார்.

வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள மாறுவேட உடைக் கடையில் துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகளுக்குத் தாயான கர்ப்பிணி கொல்லப்பட்டார். மேலும், இரு பதின்ம வயதினர் உட்பட அறுவர் காயமடைந்தனர்.

ஓக்லஹோமா நகரில் கேளிக்கைக் கூடாரப் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் ஒருவருக்குக் காலில் பல குண்டுக் காயங்கள் ஏற்பட்டன. அங்கிருந்த மேலும் இருவர் வாகனம் மோதி மாண்டனர். கல்லூரி வளாகங்களுக்கும் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்கும் அருகே மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாயினர்.

அலபாமாவின் பர்மிங்ஹாமில் கல்லூரி அளவிலான முக்கியக் காற்பந்துப் போட்டி நிகழ்ந்த இடத்தில் நடந்த தாக்குதலில் ஒருவர் மாண்டார்; எண்மர் காயமடைந்தனர்.

அங்கிருந்து வடக்கே அமைந்துள்ள இல்லினோய் வெஸ்லியன் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே எண்மர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானதில் 19 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்