தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுவிக்க இணங்கியது ஹமாஸ்

2 mins read
79d8d471-95c6-420c-a2da-70f17fb375be
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சேதமுற்ற கட்டடம். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: ஹமாஸ் குழு தன்வசமிருக்கும் இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுவிக்க இணங்கியுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் குறித்து மேலும் பேசவேண்டியிருப்பதாக அது சொன்னது.

உயிருடன் இருப்பவர், மாண்டவர் என இஸ்ரேலியக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஒப்புக்கொள்வதாக ஹமாஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவைக் கடந்த மாதம் (செப்டம்பர்) 29ஆம் தேதி சந்தித்தபோது 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிமாற்ற முறைக்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் பிணையாளிகளை விடுவிக்கத் தயார் என்று அந்தக் குழு கூறியது.

காஸாவின் எதிர்காலம், பாலஸ்தீனர்களின் உரிமை போன்ற மற்ற விவகாரங்கள் குறித்து ஹமாஸ் மேலும் பேச விரும்புவதைப் போல் தோன்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் டிரம்ப், அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள ஞாயிற்றுக்கிழமை வரை ஹமாசுக்குக் கெடு கொடுத்திருந்தார். அதற்கு இணங்காவிட்டால் அந்தக் குழு நரகத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அவர் மிரட்டியிருந்தார்.

ஹமாசின் பதிலுக்குப் பிறகு அதிபர் டிரம்ப், ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத்தில் அவரின் கருத்தைப் பதிவிட்டார். நீடித்த அமைதிக்குக் குழு தயாராகிவிட்டது என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

இஸ்ரேலுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார் திரு டிரம்ப்.

“காஸா மீது வெடிகுண்டு வீசுவதை உடனடியாக நிறுத்துங்கள். அப்போதுதான் பிணையாளிகளைப் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் மீட்க முடியும்,” என்று அவர் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டார். அமைதித் திட்டத்தின் விவரங்கள் குறித்துப் பேசிவருவதாகவும் அமெரிக்க அதிபர் சொன்னார்.

ஹமாசின் ஒப்புதலை வரவேற்ற அவர், வரலாறு கண்டிராத சிறப்பான நாள் இது என்றார். அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்படுவார்கள் என்றும் திரு டிரம்ப் கூறினார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் முன்வைத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. காஸா வட்டாரத்தில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு ராணுவத்திற்கு அது உத்தரவிட்டுள்ளது.

அமைதித் திட்டத்தின்படி, ஹமாஸ் அதன் வசமுள்ள எஞ்சிய பிணையாளிகள் அனைவரையும் சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்த 72 மணிநேரத்திற்குள் விடுவிக்கவேண்டும். ஹமாசின் பிடியில் ஏறக்குறைய 20 பேர் உயிருடன் இருப்பதாகவும் மாண்ட பிணையாளிகள் சிலரின் சடலங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. பதிலுக்கு, இஸ்ரேல் அதன் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுவிக்கவேண்டும்.

காஸாவை ஆள்வதில் ஹமாசுக்குப் பங்கிருக்காது. பாலஸ்தீனத் தனிநாடு உருவாகவும் அமைதித் திட்டம் வழியமைக்கும் என்று நம்பப்படுகிறது. திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கிய பிறகு காஸா வட்டாரத்திற்கு உதவிப்பொருள்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்