30 நாள்களில் ஹமாஸ் ஆயுதக்களைவு தொடங்கும்: ஜெரார்ட் குஷ்னர்

30 நாள்களில் ஹமாஸ் ஆயுதக்களைவு தொடங்கும்: ஜெரார்ட் குஷ்னர்

2 mins read
e8d81c7a-dae3-408e-afd9-2c4e121f4c25
போரின் காரணமாக நிலைகுலைந்திருக்கும் காஸா. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜெருசலம்: ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதங்களைக் களையும் நடவடிக்கையிலும் காஸா அமைதித் திட்டத்தை முன்னெடுப்பதிலும் அடுத்த 30 நாள்களுக்குள் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தூதர் ஜெரார்ட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் டெல் அவீவ் நகரில் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்குத் திரு குஷ்னர் பேட்டியளித்தார்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் உருவாக்கிப் பயன்படுத்திய சுரங்கப் பாதைகளை அடைப்பதும் அந்த அமைப்பினர் வைத்திருக்கும் ஆயுதங்களை அகற்றுவதும் விரைவில் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

த கார்டியன் செய்தியின்படி, ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் களைவு நடவடிக்கைகளை அமெரிக்க ஜெனரல் ஒருவர் நேரில் மேற்பார்வையிடுவார் என்பதில் திரு குஷ்னருக்கும் திரு நெட்டன்யாகுவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

முழுமையான ஆயுதக் களைவு நிறைவேறும் வரை காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் மீட்டுக்கொள்ளப்பட மாட்டா என்பதில் பிரதமர் நெட்டன்யாகு உறுதியாக உள்ளார்.

காஸாவில் முழுமையான ஆயுதக் களைவு நடைமுறைக்கு வரும் வரை எந்தவொரு மறுசீரமைப்புப் பணியும் நடைபெறாது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக எகிப்தில் ஹமாஸ் பிரதிநிதிகளுடன் திரு குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அமெரிக்க அமைதித் திட்டத்துக்குத் தானும் முழுமையாகக் கட்டுப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

அமெரிக்க ஜெனரல் ஜாஸ்பர் ஜெஃபர்ஸ் தலைமையிலான அனைத்துலக நிலைப்படுத்தல் படையின் மேற்பார்வையில் ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நிர்வாகத்தின் இந்தப் புதிய முயற்சி அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காஸாஹமாஸ்ஆயுதம்அமெரிக்காஇஸ்ரேல்