பாலஸ்தீன பகுதிகள்: மத்திய கிழக்கின் காஸாவில் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தனது குழுவை அடுத்த வாரம் தோஹாவுக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது பற்றி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9ஆம் தேதி) கூறிய ஹமாஸ் தரப்பு இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்று கூறியுள்ளது.
சென்ற வாரம் கெய்ரோவில் மத்தியஸ்தர்களை சந்தித்துப் பேசிய ஹமாஸ் குழுவினர் உடனடியாக, எவ்வித முன்நிபந்தனை, கட்டுப்பாடுகள் இல்லாமல், மனிதாபிமான உதவி காஸாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் ஹமாஸ் குழு இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்றும் அது நிரந்தரப் போர்நிறுத்தத்துக்கு வழிவிடும் வகையில் அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுதல், அப்பகுதியை முற்றுகையிலிருந்து விடுவிப்பது, காஸா பகுதியை மறுநிர்மாணம் செய்வது, அப்பகுதிக்கு நிதியுதவி அளிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்றும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
இவை இடம்பெறக்கூடும் என தங்களுக்கு ஆக்கபூர்வமாக கோடி காட்டப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விளக்கியது.
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கான இஸ்ரேலியக் குழுவை அந்நாடு திங்கட்கிழமை (மார்ச் 10ஆம் தேதி) அனுப்பும் என்று பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய முதல் கட்ட போர்நிறுத்தம் ஏப்ரல் மாத நடுப்பகுதிவரை வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் முதல் கட்ட போர்நிறுத்தம் மார்ச் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அந்த ஆறுவார போர்நிறுத்தக் காலம் அமைதியாக கழிந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வமயம், 25 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் எட்டுப் பேர்களின் உடல்களும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டன. பதிலுக்கு இஸ்ரேல் 1,800 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது.